search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருங்கைக்காய்-மாங்காய்
    X
    முருங்கைக்காய்-மாங்காய்

    தஞ்சையில் 1 கிலோ முருங்கைக்காய் ரூ.70-க்கு விற்பனை

    தஞ்சையில் முருங்கைக்காய் விலை குறைந்து 1 கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மாங்காய் விலையும் குறைந்து ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    தஞ்சாவூர்:

    முன்பெல்லாம் நம் வீட்டு தோட்டத்தில் எப்போதும் எளிதில் கிடைக்கும் காய் முருங்கை. முருங்கைக்காயை சமைத்தால் அன்று வீடே மணக்கும். பெரும்பாலும் முருங்கையை சமைப்பதற்கு காரணம் அதில் உள்ள மருத்துவக்குணங்களும், நிறைந்து காணப்படும் சத்துக்களும் தான். நவீன காலத்தில் தோட்டங்கள் எல்லாம் மனைகளாக ஆகிவிட்ட காரணத்தினால் கடைகளிலாவது வாங்கி முருங்கையை சமைத்து சாப்பிட வேண்டியது உள்ளது. ஒரு திரைப்படத்தின் மூலம் முருங்கைக்காய் மிகவும் பிரபலமானது.

    தஞ்சையில் சில நாட்களாக விலை அதிகமாக காணப்பட்ட முருங்கைக்காய் தற்போது விலை குறைந்து கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் கிலோ கணக்கில் வாங்காமல் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வாங்கி சென்றனர். இந்தநிலையில் முருங்கைக்காய் விலை குறைந்து நேற்று கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் மாங்காய் விலையும் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட மாங்காய் நேற்று முன்தினம் ரூ.70-க்கும், நேற்று ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில்,

    தஞ்சைக்கு திருச்சி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாங்காய் கொண்டு வரப்படுகிறது. அதே போல் ஆண்டிப்பட்டி, தேனி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைவாக இருந்ததாலும், விளைச்சல் குறைவாக இருந்ததாலும் முருங்கைக்காய் மற்றும் மாங்காய் விலை அதிகரித்து காணப்பட்டது.

    ஆனால் தற்போது மாங்காய் சீசன் காலம் தொடங்கியதாலும், வரத்து அதிகரித்துள்ளதாலும் விலை குறைந்துள்ளது. விலை அதிகமாக இருந்ததால் இல்லத்தரசிகள் குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர். தற்போது விலை குறைந்துள்ளதால் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றார்கள். மேலும் சீசன் காலம் தொடங்கிவிட்டதால் தற்போது விலை குறைய தொடங்கி விட்டது. இனி வரும் நாட்களிலும் விலை மேலும் குறை வாய்ப்பு உள்ளது என்றனர்.
    Next Story
    ×