search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்ய வந்த போது எடுத்தபடம்.
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்ய வந்த போது எடுத்தபடம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பேட்டரி காரில் சென்று சசிகலா சாமி தரிசனம்

    அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டதாக அறிவித்த சசிகலாவுடன் அ.ம.மு.க. வேட்பாளர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருச்சி:

    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் இறுதியில் விடுதலையானார். பிப்ரவரி 8-ந் தேதி பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த சசிகலாவுக்கு வழி நெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் சசிகலா தங்கி இருந்தார்.

    அப்போது, தான் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த சசிகலா பின்னர் திடீரென அரசியலில் இருந்து விலகி ஒதுங்கி இருக்க போவதாக கூறினார்.

    இந்தநிலையில் தஞ்சாவூர் சென்ற சசிகலா அங்கு நேற்று முன்தினம் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூருக்கு சென்று மகாலிங்க சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலை சசிகலா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தார். அவருடன் அவரது உறவினரான டாக்டர் வெங்கடேசும், அவரது மனைவியும் வந்திருந்தனர். அவர்களுடன் வந்திருந்த அவர்களது ஆஸ்தான பட்டர் வேதாந்தி அவர்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.

    ரங்கா, ரங்கா கோபுரம் அருகிலிருந்து பேட்டரி காரில் ஏறிய சசிகலா மூலவர் ரெங்கநாதர், தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார், உடையவர் என்கிற ராமானுஜர் ஆகிய சன்னதிகளில் சாமிதரிசனம் செய்தார். சசிகலா பயணித்த பேட்டரி கார் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஜெயலலிதாவால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் சாமி தரிசனம் செய்து முடித்த நேரத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், சசிகலாவை சந்தித்து சிறிது நேரம் பேசினார். அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டதாக அறிவித்த சசிகலாவுடன் அ.ம.மு.க. வேட்பாளர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×