search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    சிறப்பு டி.ஜி.பி.யை இதுவரை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை?- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

    பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி.யை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
    சென்னை:

    தமிழக சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் மீது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பாலியல் புகார் செய்தார். முதல்-அமைச்சர் சுற்றுப்பயணத்தின்போது, அந்த உயர் போலீஸ் அதிகாரி, தன்னை அவரது காரில் ஏற்றி பாலியல் தொந்தரவு செய்ததாக அந்த பெண் அதிகாரி கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்தநிலையில், பாலியல் புகாரை கொடுக்க விடாமல் அந்த பெண் அதிகாரிக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

    சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக பாலியல் விசாரணை தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இருந்து பெற்று பார்வையிட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், புலன் விசாரணையை இந்த ஐகோர்ட்டு கண்காணிக்கும் என்று உத்தரவிட்டார்.

    பின்னர், இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு, நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை பரிசீலித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேசே விசாரிக்கலாம் என்று அனுமதி அளித்தார். அதன்படி, இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘‘சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான குற்றச்சாட்டு சட்டப்படி விசாரிக்கப்படுகிறது’’ என்றார்.

    அப்போது குறுக்கிட்ட சிறப்பு டி.ஜி.பி.யின் தரப்பில் ஆஜரான வக்கீல் அப்துல் சலீம், ‘‘சிறப்பு டி.ஜி.பி. தரப்பு கருத்து கேட்காமல் விசாரணை நடைபெறுகிறது. பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ஒரு விசாரணையை தொடங்குவதற்கு முன்பே, ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வாட்ஸ்-அப் குரூப்பில், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி.யை தூக்கில் போட வேண்டும் என்று பதிவு போட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு சாட்சியாக நாங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு அதிகாரி, விசாகா கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை நாளை இந்த குற்றச்சாட்டு பொய்யானால்? எனவே, சிறப்பு டி.ஜி.பி., தரப்பு கருத்தை இந்த ஐகோர்ட்டில் ‘சீல்' வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்கிறோம்’’ என்றார்.

    அதற்கு நீதிபதி, ‘‘இந்த விசாரணையை நீங்களும் கவனித்து வாருங்கள். ஏதாவது தகவல் தெரிவிக்க வேண்டுமென்றால் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம். அவை இந்த வழக்கில் ஒரு ஆவணமாக எடுத்துக்கொள்ளப்படும்’’ என்று கூறினார்

    பின்னர் அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீலிடம், ‘‘பாலியல் புகார் கொடுக்க வந்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை தடுத்து நிறுத்தினார் என்று போலீஸ் சூப்பிரண்டு ஒருவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால், பாலியல் புகாரில் சிக்கிய அந்த சிறப்பு டி.ஜி.பி.யை ஏன் இதுவரை பணியிடை நீக்கம் செய்யவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல், ‘‘முறைப்படி விசாரணை நடக்கிறது. உரிய நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும்’’ என்றார்.

    இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது, சி.பி.சி.ஐ.டி., விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை இந்த ஐகோர்ட்டு உன்னிப்பாக கவனிக்கும்’’ எனறு கூறினார்.
    Next Story
    ×