search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகைப்பூ
    X
    மல்லிகைப்பூ

    வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைந்தது- மல்லி கிலோ ரூ.400-க்கு விற்பனை

    கோவை பூமார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் மல்லி கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    கோவை:

    தமிழகத்தில் ஆயுதபூஜை, பொங்கல், தீபாவளி, ஆடிப்பெருக்கு, கார்த்திகை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். இதனால் பூக்களின் விலையும் அதிகரிக்கும். தற்போது கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் வரத்து அதிகரித்ததால் பூக்களின் விலை குறைந்து உள்ளது.

    அதன்படி கடந்த வாரம் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ தற்போது ரூ.400-க்கு விற்பனை ஆனது. விலை குறைந்து உள்ளதால் நேற்று பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி சென்றனர்.

    இது குறித்து பூமார்க்கெட் மலர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    கோவை பூமார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், நிலக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ கொண்டு வரப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக கடந்த சில வாரங்களாக பூக்களின் வரத்து குறைந்தது. வெயில் காரணமாக பூக்களின் உற்பத்தி அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக கோவை பூமார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பூக்களின் விலை குறைந்து உள்ளது. கடந்த வாரம் ரூ.1,500-க்கு விற்கப்பட்ட ஜாதி மல்லி ரூ.400-க்கும், ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்பட்ட சாமந்தி ரூ.200-க்கும், ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்ட அரளி ரூ.80-க்கும், ரூ.240-க்கு விற்கப்பட்ட சம்மங்கி ரூ.200-க்கும், ரூ.400-க்கு விற்கப்பட்ட பட்டன் ரோஜா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டன. பூக்களின் வரத்து தொடர்ந்து அதிகரித்தால் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×