search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தண்ணீர் தொட்டியில் குதித்து அக்காள், தம்பி தற்கொலை

    கடன் தொல்லை காரணமாக தண்ணீர் தொட்டியில் குதித்து அக்காள், தம்பி தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவருடைய மனைவி அலமேலு (வயது 55). இவர்களுக்கு பிரீத்தா (30) என்ற மகளும் அருண்குமார் (25) என்ற மகனும் இருந்தனர்.

    இதில் அருண்குமார் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பிரீத்தாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரமேஸ்வரன் இறந்துவிட்டார். அருண்குமார் புதிதாக வீடு கட்டியதால் பல இடங்களில் அவர் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த கடனை அடைக்க முடியாமலும், மனநலம் பாதிக்கப்பட்ட அக்காளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமலும் அருண்குமார் திணறி வந்தார்.

    கடன் தொல்லை காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டால் மனநலம் பாதிக்கப்பட்ட அக்காளை கவனிப்பது யார் என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. எனவே அவர் தனது அக்காளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    நேற்று முன்தினம் மதியம் அலமேலு வெளியே சென்றார். அப்போது அருண்குமார், தனது வீட்டின் வளாகத்தில் உள்ள 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் அக்காளுடன் உள்ளே இறங்கி, இரும்பால் ஆன மூடியை மூடிவிட்டு உள்ளே குதித்தார்.

    சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அலமேலு, மகன், மகளை தேடினார். ஆனால் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று காலையில் போலீசார் அலமேலு வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர்கள் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, அதற்குள் அருண்குமார், பிரீத்தா ஆகியோர் பிணமாக கிடப்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் 2 பேரும் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    பின்னர் அவர்கள் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருண்குமார் தனது கைப்பட எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டது.

    அந்த கடிதத்தில், கடன் அதிகமாக இருப்பதால், அக்காளுக்கு சிகிச்சை கொடுக்க முடியவில்லை. எனவே அப்பா சென்ற இடத்துக்கே நாங்களும் செல்கிறோம் என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×