search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாசரேத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

    நாசரேத் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாசரேத்:

    நாசரேத் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் கடந்த மாதம் 19-ந்தேதி ஒரு வாலிபர் தலையணை வாங்க வந்துள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கடையில் வைத்திருந்த ரூ.9 ஆயிரத்து 400-ஐ எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.

    இதுகுறித்து கடை உரிமையாளர் நாசரேத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து கடையில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று சாயர்புரம் பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் ஏரல் அருகே உள்ள செபத்தியாபுரம் சாமிகோவில் தெருவை சேர்ந்த பிரபு(வயது 30) என்பதும், அவர் தான் ஜவுளிக்கடையில் பணத்தை திருடினார் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    பிரபு கோவையில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது இருந்தே அவர் சிறிய திருட்டுகளை செய்து வந்துள்ளார். கொரோனா காரணமாக வேலை இழந்த அவர் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி அவர் நாசரேத்தில் உள்ள காதி கிராப்ட்டில் ரூ.9 ஆயிரத்து 200-ஐ திருடிச்சென்றுவிட்டார். அதற்கு 2 நாட்களுக்கு பிறகு 30-ந்தேதி காயல்பட்டினத்தில் உள்ள ஸ்டே‌ஷனரி கடையில் ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்தார் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து போலீசார் பணத்தை மீட்டனர். மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிரபுவுக்கு இந்திராதேவி(22) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    கைது செய்யப்பட்டுள்ள பிரபு ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு நாசரேத்தில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து வந்த பெண்ணிடம் ரூ.6 ஆயிரத்தை திருடிச்சென்ற வழக்கில் ஜெயிலுக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாசரேத் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சி.சி.டி.வி. கேமிராக்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். அவை குற்றங்களை தடுக்க பெரிதும் உதவும். எனவே அனைவரும் கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Next Story
    ×