search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    லாரி வாடகை 30 சதவீதம் அதிகரிப்பு- காய்கறி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

    லாரி வாடகை உயர்வதால் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்தி இருப்பதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் 14 லட்சம் லாரிகள் பயன்பாட்டில் உள்ளன. டீசல் விலை உயர்வு காரணமாக 2 வாரங்களுக்கு முன்பு பார்சல் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை, மாதவரத்தில் நடந்தது.

    இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. லாரி வாடகையை நேற்று நள்ளிரவு முதல் 30 சதவீதம் உயர்த்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து லாரி வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை கொண்டு செல்லும்போது லாரி வாடகையையும் சேர்த்து தான் அந்த பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே லாரி வாடகை உயர்வதால் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல் கட்டுமான பொருட்கள், மருத்துவ பொருட்கள் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. வரத்தை பொறுத்தே சந்தைகளில் காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இனி காய்கறிகள் அதிகம் வந்தாலும் லாரி வாடகை அதிகமாகி இருப்பதால் அவற்றின் விலை குறைய வாய்ப்பு இல்லை. மேலும் விலை உயர அதிக வாய்ப்பு உள்ளது. மளிகை பொருட்கள் விலையும் உயரும்.

    லாரி வாடகை உயர்வதால் காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயரும். எனவே ஏழை, நடுத்தர மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×