search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கோவை அருகே அடுத்தவர் தட்டில் இருந்து புரோட்டா எடுத்து சாப்பிட்டவர் கொலை

    கோவை அருகே அடுத்தவர் தட்டில் இருந்து புரோட்டா எடுத்து சாப்பிட்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மாவட்டம் இடையர்பாளையம் சிவாஜி காலனி சிவகாமி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 25).

    இவருக்கு தடாகத்தில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றும் 2 பேர் நண்பர்களாகினர். டாஸ்மாக் கடைக்கு வரும்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நட்பானது.

    நாளடைவில் நண்பர்கள் வேலை பார்க்கும் செங்கல் சூளைக்கே ஜெயக்குமார் சென்று நண்பர்களுடன் மது அருந்தி வந்தார். இதேபோல நேற்றும் செங்கல் சூளைக்கு சென்று நண்பர்களுடன் மதுகுடித்தார்.

    அந்த சமயம் செங்கல் சூளையின் பக்கத்து குடியிருப்பில் தங்கியிருந்த வெள்ளிங்கிரி (51) என்பவர் புரோட்டா சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். மதுபோதையில் இருந்த ஜெயக்குமாருக்கு, வெள்ளிங்கிரி புரோட்டா சாப்பிடுவதை பார்த்து நாக்கு ஊறியது. உடனே வெள்ளிங்கிரியிடம் எந்த அனுமதியும் பெறாமல் அவர் சாப்பிட்டுக் கொண்டு இருந்த தட்டில் இருந்து புரோட்டாவை எடுத்து ஜெயக்குமார் சாப்பிட்டார்.

    ஜெயக்குமாரின் இந்த அநாகரீகமாக செயல் வெள்ளிங்கிரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜெயக்குமாரை அவர் கண்டித்தார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது வெள்ளிங்கிரியின் மனைவி பற்றி ஜெயக்குமார் தகாத வார்த்தைகள் பேசினார். இதில் வெள்ளிங்கிரிக்கு மேலும் ஆத்திரத்தை உண்டாக்கியது. அந்த சமயம் ஜெயக்குமார், அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து வெள்ளிங்கிரியை தாக்கினார்.

    இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற வெள்ளிங்கிரி, அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து ஜெயக்குமாரின் பின் தலையில் தாக்கினார். ஜெயக்குமார் சுருண்டு கீழே விழுந்தார். அதன்பிறகும் ஆத்திரம் தீராத வெள்ளிங்கிரி, தலை மற்றும் முகத்தில் மீண்டும், மீண்டும் அடித்தார். இதில் ஜெயக்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுபற்றி அந்த பகுதியில் தடாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து வெள்ளிங்கிரி கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் ஜெயிலில் அடைக்க உள்ளனர்.

    Next Story
    ×