search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளச்சல் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்த பெண் ஒருவரிடம் முக ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்
    X
    குளச்சல் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்த பெண் ஒருவரிடம் முக ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்

    திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டு ஆய்வு

    திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டு ஆய்வு செய்தார்.
    சென்னை:

    சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கு கடந்த மாதம் 17-ந்தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டு வந்தது. விருப்ப மனு அளிப்பதற்கான காலக்கெடு கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது.

    மொத்தம் 8,388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன. இதில் 7,967 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளித்தனர். இதையடுத்து நேர்காணலுக்கு 7 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் சுரேஷ்ராஜன் ஆகியோர் இந்த நேர்காணலை நடத்தினார்கள்.

    காலை 9 மணிக்கு நேர்காணல் தொடங்கியது. முதலில் கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்டம், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மற்றும் ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. போட்டியிட விரும்புபவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டு ஆய்வு செய்தார்.

    நேர்காணலுக்கு வந்தவர்களிடம் முக்கியமாக 3 கேள்விகள் கேட்கப்பட்டன. கட்சியில் எத்தனை வருடமாக இருக்கிறீர்கள்? உங்கள் தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்டன. மேலும் கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள் உள்ளிட்ட சில கேள்விகளும் கேட்கப்பட்டன. நேர்காணலில் பங்கேற்க வந்தவர்களுடன் அந்தந்த மாவட்ட செயலாளர்களும் உடன் இருந்தனர்.

    இன்று காலை நடந்த நேர்காணலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சுரேஷ் ராஜன், ஆஸ்டின், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஆவுடையப்பன், பூங்கோதை, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இன்று மாலை விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தேனி தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. இன்று மட்டும் 1,400 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். வருகிற 6-ந் தேதி வரை நேர்காணல் நடைபெறுகிறது.

    Next Story
    ×