search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு
    X
    சென்னை ஐகோர்ட்டு

    நீட் தேர்வு முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

    ‘நீட்’ தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கோவையைச் சேர்ந்த மாணவர் மனோஜ், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு நடந்து முடிந்ததும் அக்டோபர் 5-ந் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது. நான், ‘நீட்’ தேர்வில் 700-க்கு 594 மதிப்பெண் பெற்றதாக அக்டோபர் 8-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை இணையதளத்தில் காண்பித்தது.

    திடீரென்று அக்டோபர் 17 -ந் தேதி எனது மதிப்பெண்ணை 248 ஆக குறைத்து காண்பித்து ஓ.எம்.ஆர். விடைத்தாள் வெளியிடப்பட்டது. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    மேலும், அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 594 மதிப்பெண் என காட்டிய ‘ஸ்க்ரீன் ஷாட்’ புகைப்படங்கள் மாணவர் தரப்பில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, 'இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் குற்றங்களை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்கலாமா?' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    அதற்கு மத்திய அரசு, தேசிய தகவல் மையம் இதுபோன்ற விவகாரங்களை விசாரிப்பதில் கைதேர்ந்தது என்றும், இந்த அமைப்பு சுதந்திரமான அமைப்பு என்பதால் மத்திய அரசின் குறுக்கீடு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    தேசிய தேர்வு முகமை தரப்பில், 'குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட முடியும். இந்த வழக்கில் அப்படி எந்த முகாந்திரமும் இல்லை. ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓ.எம்.ஆர். விடைத்தாளில் திருத்தம் செய்யவோ, ஏற்கனவே எழுதியவற்றை அழிக்கவோ முடியாது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் அது இந்த நிறுவனத்தின் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்' என்றார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    அந்த தீர்ப்பில், 'நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைததாள் முறைகேடு குறித்து சைபர் கிரைம் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும்.

    யார் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் ஆரம்பக்கட்ட விசாரணையை மேற்கொண்டு 3 மாதத்திற்குள் சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறி உள்ளார்.
    Next Story
    ×