search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிக
    X
    தேமுதிக

    தொகுதி பங்கீட்டில் தேமுதிக அதிருப்தி?- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    அதிமுக கூட்டணியில் 15 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறி இருப்பதால் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாகவும் எனவே பேச்சு வார்த்தைக்கு செல்லவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் பணியில் ஒவ்வொரு கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணிகளை முடிவு செய்தல், வேட்பாளர் பட்டியல்களை தயாரித்தல், தேர்தல் அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையவில்லை. தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு மட்டும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. பா.ஜனதா மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    பா.ஜனதா சார்பில் அ.தி.மு.க.விடம் 60 தொகுதிகளுக்கான பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் 30 தொகுதிகளை பா.ஜனதா கேட்கிறது. ஆனால் 21 தொகுதிகளை மட்டுமே பா.ஜனதாவுக்கு கொடுக்க அ.தி.மு.க. விரும்புகிறது.

    பா.ஜனதா சார்பில் ஏற்கனவே 3 தடவை தொகுதி பங்கீடு தொடர்பாக அமைச்சர்களுடன் பேசப்பட்டது. நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார். பா.ஜனதா தொகுதிகள் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    தே.மு.தி.க. சார்பில் இதுவரை 2 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விஜயகாந்தை நேரில் சென்று நேற்று முன்தினம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்தனர். நேற்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை தே.மு.தி.க. நிர்வாகிகளான பார்த்தசாரதி, மோகன்ராஜ் ஆகியோர் சந்தித்து பேச்சு நடத்தினார்கள்.

    இன்று காலை 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தே.மு.தி.க.வை அ.தி.மு.க. தலைவர்கள் அழைத்து இருந்தனர். காலை 10.30 மணியளவில் அமைச்சரான தங்கமணி வீட்டில் வைத்து இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மதியம் 1 மணி வரையில் பேச்சுவார்த்தைக்காக தே.மு.தி.க.வினர் யாரும் செல்லவில்லை.

    பா.ம.க.வுக்கு இணையாக 23 தொகுதிகளையாவது தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அ.தி.மு.க. தலைவர்களோ 15 இடம் மட்டுமே தர முடியும் என்று கூறி இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக தே.மு.தி.க. அதிருப்தியில் இருப்பதாகவும் எனவே பேச்சு வார்த்தைக்கு செல்லவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்தநிலையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார், கே.பி. அன்பழகன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுக்கு இறுதி வடிவம் கொடுக்க அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு சிறுசிறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த கட்சிகளின் தலைவர்களும் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்கள்.

    மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன் இன்று அ.தி.மு.க. தலைமைகழகத்திற்கு வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்.

    Next Story
    ×