
சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி தேர்தல் கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், பேனர்கள் போன்றவை உடனடியாக அகற்றப்பட்டன. தேர்தல் விதிமுறைகளை கட்சிகள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 9 கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேர்தல் செலவு கணக்குகளை முறையாக கையாள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
அப்போது அரசியல் கட்சிகள் சார்பாகவும், பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. கொரோனா காலத்தில் இந்த தேர்தல் நடைபெறுவதால், அதற்கேற்ற விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தேர்தல் கமிஷனர் கேட்டுக் கொண்டார்.