search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக - திமுக
    X
    அதிமுக - திமுக

    தமிழகத்தில் 3-வது அணி கரை சேருமா...

    தமிழகத்தில் அதிமுக, திமுக இருமுனை போட்டி என்பது எல்லோரது கணிப்பாக இருந்தாலும் புதிதாக கமலுடன் கை கோர்க்கும் கட்சிகளால் 3-வது அணியும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
    தமிழகத்தில் அதிமுக, திமுக இருமுனை போட்டி என்பது எல்லோரது கணிப்பாக இருந்தாலும் புதிதாக கமலுடன் கை கோர்க்கும் கட்சிகளால் 3-வது அணியும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    மூன்றாவதாகவும் ஒரு அரசியல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. அது நகர்வதை பொறுத்துதான் புயலாக உருவெடுக்குமா அல்லது வலுவிழந்து போய்விடுமா என்பது தெரிய வரும்.

    தமிழக தேர்தல் களத்தை அதகளம் செய்ய அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கூட்டணிகள் வரிந்துகட்டுகின்றன. இந்த 2 திராவிட கட்சிகளையும் சுற்றித்தான் மற்ற கட்சிகள் வட்டமிடுகின்றன.

    தமிழ்நாடானது அரை நூற்றாண்டை கடந்து தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வாலேயே மாறி மாறி ஆளப்பட்டு வந்திருக்கிறது. இரண்டு கட்சிகளும் தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் ஒன்றிய அரசியல் அவை இடம்பெறுமே அன்றி மாநில அரசியல் கூட்டணி கட்சிகளுக்கு என்றுமே பங்கு தந்ததில்லை. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பல்வேறு புதிய கட்சிகளும் 3-வது அணிகளும் தொடர்ந்து உருவாகி வந்திருக்கின்றன. எனினும் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலில் 3-வது மாற்றுக்கு இடம் இருக்கிறதா?

    எனவே இருமுனை போட்டி என்பதுதான் எல்லோரது கணிப்பாக இருந்தது. ஆனால் இப்போது புதிதாக கமலுடன் கை கோர்க்கும் கட்சிகளால் 3-வது அணியும் வலுப்பெறலாம் என்று நினைக்க வைக்கிறது.

    பொதுவாகவே அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வாக்குகளை ஒருங்கிணைக்க ஒவ்வொரு தேர்தலிலும் எடுத்த முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.

    இதற்கு கடந்த கால தேர்தல் வரலாறுகளே சாட்சி. மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சிகளுடன் திராவிட கட்சிகள் கூட்டணி அமைப்பது தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த காட்சி தொடர்கிறது. அதேநேரம் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக 3-வது அணி என்ற முன்னெடுப்புகள் முன்னேறியதும் இல்லை.

    எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 1988-ல் தமிழக காங்கிரஸ் தலைவராக மூப்பனார் இருந்தார். அப்போது 3-வது அணி உருவாகி களம் கண்டது. வலுவான ஆளுமை என்று கருதப்பட்ட மூப்பனார் தலைமையிலான அணியும் சாதிக்கவில்லை. இருந்தாலும் 20 சதவீத வாக்குகள் பெற்று 26 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதுதான் தமிழக அரசியல் வரலாற்றில் 3-வது அணி கைப்பற்றிய அதிகமான தொகுதிகள்.

    1996-ல் வைகோ, தி.மு.க.வில் இருந்து வெளியேறி மிகப்பெரிய சக்தியாக பார்க்கப்பட்டார். அப்போது அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து 3-வது அணியை உருவாக்கியது. அந்த அணி வெற்றி பெற்றால் வைகோதான் முதல்வர் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வெற்றி பெறவில்லை.

    அதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக ம.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், த.மா.கா. ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் மிகப்பெரிய 3-வது அணியை உருவாக்கியது.  வெற்றி பெற்றால் விஜயகாந்த் முதல்வர் என்றும் பிரசாரம் செய்தனர். அந்த கூட்டணியும் தோல்வியைத்தான் தழுவியது. அது மட்டுமல்லாமல் பல தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தது.

    இருந்தாலும் தேர்தல் நேரத்தில் அப்படி ஒரு முயற்சி முன்னெடுக்கப்படுவது வாடிக்கைதான். வருகிற தேர்தலுக்காகவும், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தொகுதி பங்கீட்டு பேச்சில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்த இரு முன்னணி கட்சிகளுக்கும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான். அதன் அடிப்படையில்தான் வியூகங்களையும் வகுக்கும். அந்த வகையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 80 முதல் 90 சதவீத தொகுதிகளை தங்களுக்கு வைத்துக்கொண்டு மீதம் உள்ள தொகுதியைத்தான் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க திட்டமிடுகின்றன.

    இதனால் சிறிய கட்சிகளின் பதவி பேராசை மிகப்பெரிய நஷ்டத்தில்தான் முடியும். ஆனாலும் வேறு வழியின்றி கூட்டணியில் ஒட்டிக்கொண்டு சில கட்சிகள் இருக்கும். சில கட்சிகள் வெட்டி விடப்பட்டு வெளியே வரும்.

    அவ்வாறு வெளியே வரும் கட்சிகள் தேர்தல் போட்டியில் சாதிக்காவிட்டாலும் தங்கள் அரசியல் பயணத்தில் தங்களது எதிர்பார்ப்புகளை சாதித்துக் கொள்ளும். அதனால்தான் தகுதியை மீறி அதிகமான தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கவும் செய்யும். இது ஒவ்வொரு தேர்தலிலும் நடைபெறும் காட்சிகள் தான். அதேபோல் இந்த தேர்தலிலும் சில கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியே வர தொடங்கி உள்ளன.  சில கட்சிகள் கூட்டணிகளில் இடம்பிடிக்க போராடுகின்றன. இது மிகச்சிறிய கட்சிகளுக்கு மட்டுமல்ல. ஓரளவு பெரிய கட்சிகளுக்கும் இதுதான் நிலைமை.

    இதை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாகவே கூறினார். “கூட்டணிகளில் இடம் பிடிப்பதே பெரும் போராட்டமானது” என்று.

    பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி தி.மு.க.வில் இருந்தது. தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டுதான் பாரிவேந்தர் வெற்றி பெற்று தற்போது எம்.பி.யாகவும் இருக்கிறார். ஆனாலும் அந்த கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, தி.மு.க. அணியில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அவர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாருடன் கைகோர்த்து உள்ளார். இந்திய ஜனநாயக கட்சி அரசியல் அங்கீகாரம் பெற 12 தொகுதிகளில் போட்டியிட்டாக வேண்டும். தி.மு.க. கூட்டணியில் அது இயலாத காரியம். எனவே தான் வெளியே வந்ததாக கூறி இருக்கிறார். அவர்கள் கவலை அவர்களுக்கு.

    இப்போது சரத்குமார், கமல்ஹாசனையும் சந்தித்து இருக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையாவும் கமலுடன் இணைந்து உள்ளார். ஏற்கனவே அரசியல் களத்துக்கு வந்திருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் கமல் அணிக்கு வரலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

    எனவே இப்போதைய சூழலை பொறுத்தவரை கமல், சரத்குமார், ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் மூன்றாவது அணியாக உருமாறி தேர்தல் களத்தை ஒரு கை பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.

    கமல், “தான்தான் முதல்வர் வேட்பாளர்” என்று அறிவித்தும் விட்டார். இந்த சூழலில்தான் அவரது தலைமையில் 3-வதாக ஒரு அணி உருவெடுத்து வருகிறது. கடந்த தேர்தலை போல் மக்கள் நல கூட்டணியாக இல்லாமல் மக்கள் விரும்பும் கூட்டணியாக மாறுமா? என்பது போக போகத்தான் தெரியும்.

    கமலை பொறுத்தவரை முன்வைத்த காலை பின் வைக்கும் பழக்கம் இல்லாதவர். இந்த தேர்தலில் நானே முதல்வர் வேட்பாளர் என்று தனி ஒரு அணியை உருவாக்கி தேர்தலை சந்திக்க போகிறார்.

    ஒருவேளை தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்து வந்தால் கமலுடன் கூட்டணி அமைக்கலாம். இந்த பேச்சுவார்த்தை ஏற்கனவே நடந்ததுதான். ஆனால் அவ்வாறு வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்பதே அனைவரின் கருத்து. எனவேதான் இந்த புதிய அரசியல் புயல் கரை கடக்குமா அல்லது கரைந்து போகுமா என்பது சூழ்நிலையை பொறுத்தே அமையும்.

    பல மாநிலங்களில் 3-வது அணி அரசியல் போக்கையே மாற்றும் வகையில் உருவாகும் போது தமிழ்நாட்டில் இவ்வாறு போவதற்கு காரணம் தேர்தலுக்காக மட்டுமே அணி சேர்வது, ஜெயித்தால் தொடர்வது, தோற்றால் பிரிவது என்ற தலைவர்களின் மனநிலைதான்.
    Next Story
    ×