search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை கேட்கும் விடுதலை சிறுத்தை

    திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி 10 தொகுதிகளை கேட்கிறது. 25 விருப்ப தொகுதிகளையும் பட்டியலிட்டு கொடுத்துள்ளது.
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் கொடுத்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியிடம் மட்டுமே தொகுதி பங்கீடு குறித்து 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மற்ற கட்சிகளுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றாலும், மறைமுகமாக பேசி வருகின்றனர்.

    அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே தங்கள் சின்னத்தில் நிற்கவும் மற்ற கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

    இதற்கு ஒரு சில கட்சிகள் இசைவு கொடுத்துவிட்டன. ஒன்றிரண்டு இடங்களில் போட்டியிடக்கூடிய கட்சிகள் சம்மதம் தெரிவித்துவிட்டன.

    ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘‘தான் ஆரம்பத்தில் இருந்தே தனி சின்னத்தில் போட்டியிடுவோம், எங்களுடைய சுதந்திரத்தில் தி.மு.க. தலையிடாது’’ என்றும் கூறினார். இந்தநிலையில் தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

    ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் இன்று மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ம.தி.மு.க.வுடன் 5 மணிக்கும், விடுதலை சிறுத்தையுடன் 7 மணிக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது.

    தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை 10 தொகுதிகளை கேட்கிறது. 25 விருப்ப தொகுதிகளையும் பட்டியலிட்டு கொடுத்துள்ளது. செய்யூர், கரூர், திண்டிவனம், வானூர், காட்டுமன்னார் கோவில், திட்டக்குடி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்துகிறது.

    கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த விடுதலை சிறுத்தை 25 தொகுதிகளில் போட்டியிட்டது. 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தமிழத்தில் 10 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 2 தொகுதியிலும் போட்டியிட்டது. அந்த அளவுக்காவது இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.விடம் விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்துகிறது.

    மேலும் தனி சின்னத்தில் நிற்கவும் பிடிவாதம் செய்வதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தை நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘10 தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால் 8 தொகுதிகள் ஒதுக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பதை தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசிய பிறகு தான் தெரியும். தனி சின்னத்தில் போட்டியிடவே விருப்பம் தெரிவித்து உள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×