search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

    விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு முதல் அதிகாலைவரை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.
    விழுப்புரம்:

    காத்திகை, மார்கழி, தை மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது மாசி மாதம் தொடங்கி 2 வாரங்களை கடந்தும் பனிப்பொழிவு குறையவில்லை.

    விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு முதல் அதிகாலைவரை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

    ஆனால் இன்று காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு இருந்ததால் சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக காட்சியளித்தன. இதனால் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைகளில் காலை நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மிகவும் பனிப்பொழிவாக இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

    செஞ்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக காலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்த நிலையில் இன்று வரலாறு காணாத அளவில் அதிக அளவில் பனிமூட்டம் இருந்தது.

    மலைப்பகுதிகள் மட்டுமல்லாமல் நகரிலும் அதிகமாக பணிப்பொழிவு இருந்ததால் குளிர் தாங்காமல் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல் அவதிப்பட்டனர் மேலும் வாகன ஓட்டிகளும் வாகனத்தை ஓட்ட முடியாமல் முகப்பு விளக்குகளை போட்டுக் கொண்டு வாகனத்தை ஓட்டிச் சென்றனர்.

    மேலும் சிலர் வாகனங்களை ஓரங்கட்டி நிறுத்தி விட்டனர் இந்த பணி செஞ்சிப் பகுதியில் எப்போதும் காணாத வகையில் இருந்ததாக பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

    கடலூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் கடலூரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்த மழைக்கு பின்னர் கடலூர் பகுதிகளில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணிவரை கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்தது. சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சாலைகளில் சென்றனர்.

    கனரக வாகனஓட்டிகள் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் தெரியாததால் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்தினர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காணமுடிந்தது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கூறியதாவது:-

    கடலூரில் இன்று காலை 8.30 மணிவரை கடும் பனிப்பொழிவு இருந்தது. நாங்கள் இதுவரை இத்தகைய கடுமையான பனிப்பொழிவுவை இந்த பகுதியில் பார்த்தது இல்லை. காலையில் எழுந்து பார்க்கும் போது சாலைகள் அனைத்தும் ஊட்டி, கொடைக்கானல் பகுதியில் இருப்பது போல் புகை மண்டலமாக காட்சியளித்தது. சுமார் 4 அடி தூரத்தில் வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களை கூடபார்க்க முடியாத நிலையில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

    குளிர்பிரதேச பகுதியில் பனிப்பொழிவுகளை பொதுமக்கள் கைகளில் பிடித்து ரசிப்பதுபோல் இன்று கடலூர் பகுதியிலும் பனிப்பொழிவுகளை கையில் தொட்டு உணர முடிந்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடலூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை, பனி, வெயில் போன்ற சீதோஷ்ணநிலைகள் மாறி, மாறி வருவதால் பொது மக்களின் பெரும்பாலானோர் சளி காய்ச்சல் போன்ற நோய்களினால் அவதிபடுகின்றனர்.

    கடலூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக ஏராளமானோர் வந்துசெல்கின்றனர்.
    Next Story
    ×