search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

    தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளாத சூழ்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஒரு மாதம், மூன்று மாதம் அல்லது ஆறு மாதங்கள்தான் இருக்குமென்று அவதூறான, உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் செய்து வந்தார்கள். அதையெல்லாம் முறியடித்து 4 ஆண்டு காலம் நிறைவு பெற்று 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் கண்ட கனவை என் தலைமையிலான அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

    நான் பதவியேற்றதில் இருந்து இன்று வரை நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியதன் மூலம், தமிழகம் “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற அளவிற்கு உயர்ந்து ஏற்றம் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சியினர்கூட மூக்கின் மேல் விரலை வைத்து பாராட்டுகிற அரசாக உள்ளது.

    இந்த ஆட்சிக்கு உறுதுணையாக விளங்கிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முழு ஒத்துழைப்பு தந்த அமைச்சர்களுக்கு மனமார, உளமார இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். “எனக்கு பின்னாலும் அ.தி.மு.க. 100 ஆண்டு காலம் ஆளும்” என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா சூளுரைத்தார். அதற்கேற்ப, இந்த சோதனையான நேரத்தில் சிறந்த ஆட்சி, நிர்வாகம் அமைவதற்கு உறுதுணையாக விளங்கிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், நடுநிலையாக இருந்து, பக்குவமாக, ஆளுமையாக, திறமையாக செயல்பட்டு வரும் சபாநாயகருக்கும் நன்றி.

    ஒரு மாநிலம் வளர்ச்சி பெறுவதற்கு தடையில்லா மின்சாரம் வேண்டும். அந்த தடையில்லா மின்சாரத்தை வழங்கி, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்கியது; கல்வி வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தியது இந்த அரசுதான். அதிகமான சட்டக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 3 கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டு உள்ளன.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவந்து, ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிய அரசு இது.

    தேசத்திற்காக உழைத்து மறைந்த ஒப்பற்ற தலைவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக, அவர்களுக்கு மணிமண்டபங்கள், திருவுருவச் சிலைகள் அமைத்தும், அரசு விழாக்கள் எடுத்தும், அவர்களுக்கு புகழ் சேர்க்கின்ற விதமாக சட்டசபையில் அவர்களுடைய திருவுருவப்படங்களை திறந்தும் பெருமை சேர்த்த அரசு இந்த அரசு.

    ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்டமான நினைவு மண்டபத்தை அமைத்து, அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு இல்லமாக அறிவித்ததும் இந்த அரசுதான். நான் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற காலத்தில் இருந்து இன்று வரை பல்வேறு சாதனைகளைப் புரிந்து, சாதனை படைத்த அரசாக திகழ்கிறது.

    எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கண்ட கனவுகளை நனவாக்குகிற விதமாக, வருகிற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஜெயலலிதாவின் அரசு அமைப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுடைய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×