search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டு மூட்டைகளில் விலைக்கான அறிவிப்பு அட்டைகள் வைக்கப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.
    X
    பூண்டு மூட்டைகளில் விலைக்கான அறிவிப்பு அட்டைகள் வைக்கப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

    வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு: தஞ்சையில், பூண்டு விலை சரிவு

    வெளிமாநிலங்களில் இருந்து தஞ்சைக்கு பூண்டு வரத்து அதிகரித்ததால் பூண்டு விலை சரிந்துள்ளது. இதனால் விற்பனை அதிகரித்துள்ளது.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்துள்ளது. தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகின்றது. மராட்டியம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில் பூண்டு ஒரு பணப்பயிராகும். இதனால் அங்கு சாகுபடி செய்யப்படும் பூண்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    பூண்டு மருந்தாகவும், வாசனை பொருளாகவும் பயன்படுகிறது. பூண்டில் ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. பூண்டில் அதிகப்படியான வைட்டமின் சத்துகளும், தாதுக்களும் இருக்கின்றன. மராட்டியம் உள்ளிட்ட பகுதியில் பூண்டு சாகுபடியில் அதிக மகசூல் பெற்றுள்ளது. இதனால் தஞ்சை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மார்க்கெட்டிற்கும் பூண்டு வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தஞ்சை குழந்தை ஏசு கோவில் அருகே உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் பூண்டு வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைப்பூண்டு கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் முதல் ரகம் பூண்டு ரூ.140-க்கும், 2மற்றும் 3-ம் ரக ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த மாதம்(ஜனவரி) இறுதி வரை பூண்டின் விலை அதிக அளவில் காணப்பட்டது. ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து மலை பூண்டு ரூ.200க்கும், முதல் ரக பூண்டு ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், 2மற்றும் 3-ம் ரக பூண்டுகள் கிலோ ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் பூண்டின் விலையை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக பூண்டு மூட்டைகளில் அதன் விலை அடங்கிய அட்டையை வைத்துள்ளனர்.

    இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறுகையில், கடந்த மாதம்(ஜனவரி) பூண்டின் விலை அதிகமாக காணப்பட்டது. இதனால் பூண்டு வாங்குவதற்கே மக்கள் அச்சப்பட்டதுடன், குறைவாகவே வாங்கி சென்றனர். வடமாநிலங்களில் விளைச்சல் அதிகரித்ததுடன், வரத்தும் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பூண்டு விலை சற்று குறைந்துள்ளதால் ¼ கிலோ, ½ கிலோ என்று வாங்கி சென்றவர்கள் மகிழ்ச்சியோடு, தற்போது 1 கிலோ, 2 கிலோ வாங்கி செல்கின்றனர். மேலும் சில்லறை கடைக்காரர்களும் பூண்டு விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர் என்றார்.
    Next Story
    ×