
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொல்லைமேடு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் வல்லரசு (வயது 24). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார். கொரோனா காரணமாக ஊருக்கு வந்திருந்த அவர் மீண்டும் கேரளாவுக்கு ரெயிலில் செல்வதற்காக நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தார்.
அங்கிருந்து ரெயிலில் சென்றார். காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் படிக்கட்டில் பயணம் செய்த வல்லரசு தவறி விழுந்து அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.