search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகழாய்வு பணி (கோப்புப்படம்)
    X
    அகழாய்வு பணி (கோப்புப்படம்)

    ஆதிச்சநல்லூரில் 2-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்

    ஆதிச்சநல்லூரில் 2-ம் கட்ட அகழாய்வு பணியில் அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
    செய்துங்கநல்லூர்:

    உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் 2004-ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. ஆனால் அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

    எனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த வேண்டும், ஆதிச்சநல்லூரில் 2004-ல் நடந்த அகழாய்வின் அறிக்கையை வெளியிட வேண்டும், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், பாதுகாப்பதற்காக வேலிகள் அமைக்க வேண்டும் என்று செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    அதன் பயனாக ஆதிச்சநல்லூரை சுற்றி வேலி அமைக்கும் பணி தொடங்கியது. மேலும் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று மாநில அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. அதன் பயனாக ஆதிச்சநல்லூரில் கடந்த ஆண்டு மே 25-ம் தேதி மாநில அரசு சார்பில் முதல்கட்டமாக அகழாய்வு பணிகள் தொடங்கியது.

    இந்த பணிகள் தொடர்ந்து 4 மாத காலம் நடந்தது. இதில் 70-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டது. இதில் 37 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 3000 ஆண்டுகள் பழமையான மண்பாண்ட பொருட்கள், தமிழ் பிராமி எழுத்துகள், பானை ஓடுகள் என 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆதிச்சநல்லூரில் முதன் முறையாக வாழ்விடப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்தாண்டும் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முதற்கட்ட பணியாக கடந்த வாரம் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ள இடத்தினை சீரமைக்கும் பணி தொடங்கியது.

    இந்நிலையில் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள வீரப்பேரி பகுதியில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் அகழாய்வு பணியை தொடங்கி உள்ளனர்.

    இந்த பணியில் இந்த பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக 2 குழிகள் அமைப்பதாக இடத்தை தேர்வு செய்து குழி தோண்டும் பணி தொடங்கியுள்ளது.

    இந்தாண்டு நடைபெறும் இந்த அகழாய்வு பணியில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலை கண்டறிவதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×