search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்: தருமபுரியில், தற்காலிக பெண் கண்டக்டர்களுடன் அரசு பஸ்கள் இயக்கம்

    தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நடத்துனர்கள், ஓட்டுனர்கள் தற்காலிகமாக பணியமர்த்தி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    தருமபுரி:

    தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நடத்துனர்கள், ஓட்டுனர்கள் தற்காலிகமாக பணியமர்த்தி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வைப்புநிதி ரூ.7 ஆயிரம் கோடியைத் திரும்பி வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாதம் தோறும் தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகை மீண்டும் அவர்களது கணக்கில் சேர்க்க வேண்டும். 2003 -ம் ஆண்டுக்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொ.மு.ச, ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு. உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினத்தில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

    இதில் தருமபுரி அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 12 பணிமனைகளும் திருப்பத்தூர், சேலம், அஸ்தம்பட்டி ஆகிய இடங்களில் தலா ஒரு பணிமனை உள்பட மொத்தம் 14 பணிமனைகள் உள்ளன. இந்த மண்டலத்தில் 850-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் புறநகர் பஸ்கள் இயங்குகின்றன. இந்த நிலையில் வேலை நிறுத்தத்தையொட்டி முதல் நாள் வேலை நிறுத்தத்தின் போது 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் நேற்று பஸ்கள் இயக்கம் 50 சதவீதத்துக்கும் குறைந்து இயக்கப்பட்டன.

    எனவே பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி பஸ்கள் வழக்கம்போல் இயங்குவதற்கு தற்போது தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பதிவு செய்து உள்ளவர்களை வரவழைத்து அவர்களை பணியமர்த்தி ஏராளமான பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சில தற்காலிக பெண் கண்டக்டர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இன்றும், நாளையும் பேருந்துகள் குறைவாக இயங்கினாலும் கல்லூரி, பள்ளி மாணவிகளுக்கு விடுமுறை என்பதால் அந்த அளவிற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால் இந்த தொடர் வேலை நிறுத்தம் திங்கட்கிழமை வரை நீடித்தால் வேலைக்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடியவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
    Next Story
    ×