search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவர் விளம்பரங்களை மாநகராட்சி ஊழியர் அழித்த காட்சி
    X
    சுவர் விளம்பரங்களை மாநகராட்சி ஊழியர் அழித்த காட்சி

    தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள், பேனர்கள் அகற்றம்- தேர்தல் ஆணையம் உத்தரவு

    அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார்.

    இதையடுத்து, இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதம் மாநில அரசுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கி உள்ளன.

    தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மாநில அரசுகள் புதிய சலுகைகளையோ, சட்டங்களையோ அறிவிக்க முடியாது. அதிகாரிகள் இடமாற்றத்துக்கும் தேர்தல் கமி‌ஷனிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

    ஏற்கனவே நடைபெறும் திட்டங்களை செயல்படுத்தலாம். அதில் மாற்றங்கள் இருந்தாலோ, அவசரமாக நிறைவேற்ற வேண்டிய அரசு பணிகள் இருந்தாலோ தேர்தல் கமி‌ஷன் அனுமதியை பெற வேண்டும்.

    தேர்தல் நடத்தை விதி முறை அமலுக்கு வருமுன் அரசியல் கட்சிகள் நடத்திய தேர்தல் பிரசார செலவு குறித்து தேர்தல் கமி‌ஷனுக்கு தெரிவிக்க வேண்டியது இல்லை.

    இப்போது அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்கான செலவுகளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்ப வேண்டும்.

    தேர்தல் பிரசாரத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறினால் தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்கும். இதுதவிர ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு செல்பவர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு போகக்கூடாது. தகுந்த ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்ல அனுமதி இலலை. அவ்வாறு கொண்டு சென்றால் சிறப்புபடை போலீசார் அவற்றை பறிமுதல் செய்வார்கள்.

    அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள். அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள் கிழித்து அகற்றி வருகின்றனர்.

    முறையாக அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி பேனர்களும் அகற்றப்படுகின்றன. புதிதாக பேனர்களை வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் உள்ள சுவர்களில் எழுதப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் அழிக்கப்படுகின்றன.

    தனியார் கட்டிடங்களில், சுவர்களில் எழுதுவதற்கு முறையான அனுமதி பெறாவிட்டால் அவையும் அழிக்கப்படுகின்றன.

    புதிதாக சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும் என்றால் தேர்தல் கமி‌ஷன் அனுமதி பெற வேண்டும். அதற்கான செலவு கணக்கையும் தேர்தல் கமி‌ஷனிடம் தெரிவிக்க வேண்டும்.

    ஏற்கனவே ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர், பேனர்கள், சுவர் விளம்பரங்களை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளே குறிப்பிட்ட கால அளவுக்கள் நீக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவற்றை அகற்றும் செலவை அந்தந்த கட்சிகளே செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது சென்னையில் பொது இடங்கள், அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் இருக்கும் போஸ்டர், சுவர் விளம்பரங்களை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கி உள்ளனர். இதுபோல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×