search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - ராமதாஸ்
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - ராமதாஸ்

    சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: அதிமுக-பாமக இன்று மாலை பேச்சுவார்த்தை

    சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.- பா.ம.க. கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 19-ந்தேதி மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும்.

    ஏப்ரல் 6-ந்தேதி ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு மே மாதம் 2-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள தமிழக மக்கள் வாக்களித்து விட்டு 27 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. மேலும் அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு. தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை இன்று (சனிக்கிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி ஆகியோர் நேற்று இரவே சென்னை வந்தனர்.

    இன்று காலை 8.30 மணியளவில் மத்திய மந்திரிகளுடன் தமிழக பா.ஜனதா பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். சுமார் 30 நிமிடங்கள் இந்த பேச்சு வார்த்தை நீடித்தது.

    அப்போது பா.ஜனதா செல்வாக்கான தொகுதிகளை குறிப்பிட்டு அந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். குறிப்பாக கடந்த தேர்தலில் 2-ம் இடத்தை பிடித்த தொகுதிகள் 20 ஆயிரத்துக்கும் மேல் ஓட்டுகள் பெற்ற தொகுதிகளை பா.ஜனதாவுக்கு சாதகமான தொகுதியாக கூறி உள்ளனர்.

    தாங்கள் விரும்பும் தொகுதிகள் விவரத்தை பா.ஜ.க. தலைவர்கள் பட்டியலாக தொகுத்து எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தனர்.

    இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தலைர்கள் சந்தித்து பேசினார்கள்.

    இதுபற்றி பா.ஜனதா நிர்வாகிகள் கூறும்போது, “இது முதற்கட்ட பேச்சுதான். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும். 22 முதல் 25 தொகுதிகள் வரை பா.ஜனதாவுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது” என்றனர்.

    பா.ஜனதாவை தொடர்ந்து பா.ம.க.வுடனும் அ.தி.மு.க. தலைவர்கள் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுகின்றனர். இன்று மாலை 4 மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பா.ம.க. தலைவர்கள் சந்திக்கிறார்கள்.

    பா.ம.க. சார்பில் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி, பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, தன்ராஜ் ஆகியோர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

    பா.ம.க. கடந்த தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டது. எனவே அதே எண்ணிக்கையில் தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அதே நேரம் பா.ம.க.வின் மிக முக்கிய கோரிக்கையான வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதற்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்ததால் தொகுதி ஒதுக்கீட்டு பிரச்சினையில் பா.ம.க. தனது பிடிவாதத்தை தளர்த்தும் என்று கூறப்படுகிறது. எனவே பா.ம.க.வுக்கும் 22 முதல் 25 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    பா.ஜனதா, பா.மக.வை தொடர்ந்து தே.மு.தி.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என்று தொடங்கும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இதுபற்றி தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது அ.தி.மு.க.விடம் இருந்து இன்னும் அழைப்பு வரவில்லை. அழைத்ததும் பேச்சு வார்த்தைக்கு செல்வோம் என்றனர்.

    மேலும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் நடிகர் கருணாஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற உள்ளது.

    இதற்கிடையில் விழுப்புரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பா.ஜனதா மையக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் அமித்ஷா இன்று இரவே சென்னை வந்து விடுகிறார்.

    சென்னையில் அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது பா.ஜனதாவுக்கான தொகுதிகள் உறுதி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சூடு பிடித்து இருப்பதால் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
    Next Story
    ×