search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிக அளவில் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிக அளவில் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.

    திருச்சி-புதுக்கோட்டை தனியார் பஸ்களில் 3 மடங்கு கட்டண உயர்வு

    திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை வழித்தடங்களில் குறைந்த அளவு அரசு பஸ்கள் இயக்கப்படுவதால், தனியார் பஸ்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
    திருச்சி:

    தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.யு.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அரசு பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அரசுக்கு ஆதரவான அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் தனியார் டிரைவர்களை கொண்டு குறைந்த அளவிலான அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருச்சி மண்டலத்தை பொருத்தமட்டில் கடந்த இரண்டு தினங்களாக 30 சதவீத அரசு பஸ்களே இயக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் திருச்சி மாவட்டத்தில் 70 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. நேற்றைய தினமும் பெரும்பாலான அரசு பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இதன் காரணமாக பொது மக்கள் தனியார் பஸ்களில் முண்டியடித்துக் கொண்டும், தனியார் வாகனங்களிலும் அதிக வாடகை கட்டணம் கொடுத்தும் தங்கள் ஊர்களுக்கு செல்ல நேரிடுகிறது.

    குறிப்பாக திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை வழித்தடங்களில் குறைந்த அளவு அரசு பஸ்கள் இயக்கப்படுவதால், தனியார் பஸ்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

    திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு தனியார் பஸ்களில் கட்டணமாக ரூ.37 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று புதுக்கோட்டையிலிருந்து திருச்சி வந்த பயணிகளிடம் ரூ.100 முதல் 150 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு உரிய டிக்கெட்டும் வழங்கப்படவில்லை.

    இதுபற்றி தனியார் பஸ் கண்டர்களிடம் விளக்கம் கேட்டாலோ, தட்டிக் கேட்டாலோ பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்படுவதாகவும் பயணிகள் தெரிவித்தனர். நாங்கள் யாரையும் அழைக்கவில்லை, இஷ்டம் இருந்தால் வாருங்கள், இல்லையென்றால் இறங்கிகொள்ளுங்கள் என்று கூறுவதாக தெரியவந்துள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோல் திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு ஆம்னி பஸ்களில் ரூ.200 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வேன்களிலும் பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். அவசர தேவைக்காக வேறு வழியின்றி பயணிகள் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதுபற்றி தமிழ்நாடு பஸ் உரிமையாளர் சங்கங்களின் சம்மேளன மாநில செயலாளர் தர்மராஜிடம் கேட்ட போது, நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் காலை நேரத்தில் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதன் பின்னர் வழக்கமான மக்கள் வரத்து இருந்தது.

    தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இல்லை. அவ்வாறு வசூலிக்கக் கூடாது. அப்படி யாராவது தவறு செய்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி உடனடியாக பஸ் உரிமையாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றார்.

    வட்டார போக்குவரத்து அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது ஆள் பற்றாக்குறையால், தனியார் பஸ்களில் உடனடியாக சோதனை நடத்த முடியவில்லை என்றனர்.
    Next Story
    ×