
கும்பகோணம் சிவாலயங்கள் மற்றும் பெருமாள் கோவில்களில் மாசிமகப்பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதன்படி ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமகப் பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 18-ந்தேதி வைணவத் தலங்களான சக்கரபாணிசுவாமி கோவில், ராஜகோபாலசுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் ஆகிய கோவில்களில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சண்டிகேஸ்வரர் சுவாமி தேர் கோவிலின் தேரோடும் வீதிகளில் நடைபெற்றது. முன்னதாக காசிவிசுவநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 3 சிவன் கோவில்களின் உற்சவ சுவாமி-அம்பாள் தேரில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினர்.
பின்னர் தேரோட்டம் மகாமகக் குளக்கரையில் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். அதேபோல் வியாழசோமேஸ்வரர் கோவில் தேரோட்டமும் கோவிலை சுற்றி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதயடுத்து மாசிமகத்தை முன்னிட்டு நேற்று மகாமகக் குளக்கரையில் ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், காளஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், நாகேஸ்வரர், பாணபுரீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர்(அம்பாள்), கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர் ஆகிய கோவில்களின் திருமூர்த்திகள் எழுந்தருள மாசிமக தீர்த்தவாரி பெருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதேபோல் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலின் பொற்றாமரை குளத்தில் தெப்போற்சம் நடந்தது. இதில் ஆராவமுதப் பெருமாள் உபயநாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
திருவையாறு புஷ்யமண்டப படித்துறை காவிரி ஆற்று கரையில் தீர்த்தவாரியையொட்டி அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் எழுந்தருள சூலபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரியின்போது பக்தர்கள் புனிதநீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்ததால் போதிய பஸ்கள் இயக்கப்படாததாலும் வெளியூர் பக்தர்கள் அதிகம் கலந்து கொள்ளவில்லை. இதனால் கும்பகோணம் மற்றும் திருவையாறில் குறைந்த அளவே பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.