search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பரமத்தி மாரியம்மன் கோவிலில் தங்கம்- வெள்ளி நகைகள் கொள்ளை

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி மாரியம்மன் கோவிலில் காவலாளியை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி, சந்தைப் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முக்கிய விசே‌ஷ தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து காணிக்கை செலுத்தி மாரியம்மனை வழிபட்டு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு கோவில் பூசாரி மணிகண்டன் என்பவர் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றார். இதையடுத்து காவலாளி கணேசன் (வயது 70) என்பவர் வழக்கம்போல் கோவிலில் இரவு காவல் பணியில் ஈடுபட்டார்.

    இன்று அதிகாலை நேரத்தில் அவர் கோவில் வளாகத்தில் படுத்திருந்தார். அப்போது அதிகாலை சுமார் 4 மணிக்கு 3 கொள்ளையர்கள் ஜெர்கின் கோட்டும், ஹெல்மெட்டும் அணிந்தபடி அங்கு வந்தனர். இதை பார்த்த காவலாளி கணேசன், அவர்களை பார்த்து சத்தம் போட்டார். நீங்கள் யார்? வெளியே செல்லுங்கள்? என கூறினார்.

    உடனே கொள்ளையர்கள், காவலாளியை சரமாரியாக அடித்து- உதைத்து கோவில் அருகில் உள்ள ஒரு அறையில் தள்ளி கதவை அடைத்தனர். அறைக்குள் வைத்து தாழ்பாள் போட்டதால் அவரால் வெளியே வந்து கொள்ளையை தடுக்க முடியவில்லை.

    இதையடுத்து காவலாளி செல்போன் மூலம் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து கதவை திறந்து காவலாளி கணேசனை மீட்டனர்.

    அதற்குள் கொள்ளையர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கோவிலில் இருந்த சாமியின் தங்க தாலி, தங்க பொட்டு, தங்க மூக்குத்தி மற்றும் ஒரு கிலோ வெள்ளி கிரீடம் உள்ளிட்ட வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்று விட்டனர்.

    இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பரமத்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

    தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.

    கோவிலில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×