
திருமங்கலம் கப்பலூர் அருகே உள்ள பள்ளக்கா புதுப்பட்டியை சேர்ந்தவர் ராமன் மனைவி சுமதி (வயது 58). இவர் கடந்த 22-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு கள்ளிக்குடியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. தகவல் அறிந்த சுமதி அதிர்ச்சி அடைந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சுமதி திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே போலீசார் கொள்ளையர்களை பிடிக்க ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகும்.