search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கரூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை

    கரூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து தங்கநகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் காளியப்பனூர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (வயது 30). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்ற அவர் மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடந்ததுடன் அலமாரியில் வைத்திருந்த 3 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்ததுடன் வீட்டில் இருந்த 19 வெள்ளி பாத்திரங்களையும் மர்மநபர்கள் அள்ளி சென்றது தெரியவந்தது.

    இதேபோல், கரூர் தாந்தோணிமலை பொன்நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (45). பெயிண்டிங் ஒப்பந்ததாரராக வேலை செய்து வரும் இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று விட்டார். பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியின் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அலமாரியில் வைத்திருந்த 2 பவுன் தங்கநகைகள் மற்றும் வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்தும், தினேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தனித்தனியாக தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து வழக்குப்பதிவு செய்தார். மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வெவ்வேறு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×