search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள்
    X
    லாரிகள்

    தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்

    டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    சேலம்:

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது

    விலை உயர்வை கண்டித்து பல்வேறு போராட்டங்களை லாரி உரிமையாளர்கள் நடத்தி உள்ளனர். மேலும் டீசல் விலை உயர்வு காரணமாக நஷ்டம் ஏற்பட்டு வருவதால் லாரி உரிமையாளர்கள் பல ஆயிரம் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை காக்க டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய , மாநில அரசுகளை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் .

    இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டலத்திற்குட்பட்ட தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உட்பட 6 மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    இதனால் இந்த 6 மாநிலங்களில் உள்ள 30 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இந்த லாரிகள் சாலையோரங்களிலும், செட்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாரி ஸ்டிரைக்கால் ஒரே நாளில் 6 மாநிலங்களிலும் சேர்த்து லாரி உரிமையாளர்களுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் தமிழகத்தில் மட்டும் ரூ. 200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த போராட்டத்தால் தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் அரிசி மாவு, மஞ்சள், கரும்பு, சவ்வரிசி மற்றும் ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன. இதே போல வட மாநிலங்களிலும் லாரி ஸ்டிரைக் நடைபெறுவதால் அங்கிருது தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் பருப்பு, வெங்காயம் உள்பட பல பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது , இந்தியாவில் 18 மாநிலங்களை விட தமிழகத்தில் டீசல் விலை அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்திட வரியை குறைக்க வேண்டும், 2005-ம் ஆண்டு முதல் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் காலம் முடிவடைந்த பின்னரும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே அங்கெல்லாம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்.

    அதேபோல பாஸ்டேக்கால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளில் தனியாக பணம் செலுத்தும் ஒரு வழியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகளும் ஓடவில்லை. வேலை நிறுத்தம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 200 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    காலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் 50 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மத்திய மாநில அரசுகள் கவனத்தை ஈர்க்கவே என்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.

    அதன் பிறகும் மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்காவிட்டால் மார்ச் 15-ந் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். எனவே அரசு தலையிட்டு உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×