search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- சென்னை மக்களுக்கு கைகொடுத்த மெட்ரோ ரெயில்

    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 2-வது நாளாக நீடித்து வருவதால் மெட்ரோ ரெயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 2,700 பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வந்த நிலையில் போராட்டம் காரணமாக 1,400 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

    குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளானார்கள். அரசு பஸ்கள் வரும் என்று நீண்ட நேரம் காத்து நின்றனர்.

    வழக்கமான பஸ் சேவை இல்லாததால் மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர். தற்போது மெட்ரோ ரெயில் சேவை சென்னையில் 54 கி.மீ. தூரத்திற்கு முழுமையாக இயக்கப்படுகிறது.

    சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், விம்கோ நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மெட்ரோ ரெயில் உள்ளடக்குவால் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்தது.

    மாநகர பஸ்கள் முழுமையாக இயங்காததால் மெட்ரோ ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டது. தற்போது கட்டணமும் ரூ.20 வரை குறைக்கப்பட்டதால் ஏராளமானவர்கள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

    வழக்கத்தை விட 30 சதவீதம் பேர் அதிகமாக பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 5 நிமிடத்துக்கு ஒரு சேவை என்ற அடிப்படையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் சென்னை மக்களுக்கு மெட்ரோ ரெயில் மாற்று போக்குவரத்து மையமாக திகழ்ந்தது.

    சென்னையில் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையிலும், குறிப்பாக வடசென்னையை மத்திய, தெற்கு சென்னையோடு இணைக்கும் வகையில் சேவை இருப்பதால் பெரும்பாலானவர்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.

    இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 2-வது நாளாக நீடித்து வருவதால் மெட்ரோ ரெயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வோருக்கு உதவிடும் வகையில் இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் 5 நிமிடத்துக்கு ஒரு சேவை இயக்கப்படுகிறது.

    கூட்டம் நெரிசல் அல்லாத நேரத்தில் தேவைப்பட்டால் சேவையை அதிகரிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இனிவரும் காலங்களில் சாலை போக்குவரத்து தடைப்பட்டாலும் அதற்கு மாற்றாக சென்னையில் எந்த பாதிப்பும் இல்லாமல் மெட்ரோ ரெயில் சேவை நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    முன்பு மின்சார ரெயில் சேவையை மட்டுமே சார்ந்து இருந்த நிலையில் தற்போது கூடுதலாக மெட்ரோ ரெயில் சேவையும் சென்னை மக்களுக்கு கை கொடுக்கிறது.

    அன்றாட பணிகள் தடைபடாமல் தொடர்ந்திட மெட்ரோ ரெயில் சேவை புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எதிர்வரும் காலங்களில் மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×