search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஐகோர்ட்
    X
    மதுரை ஐகோர்ட்

    பட்டாசு தொழிலை முறைப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

    பட்டாசு தொழிலை முறைப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
    மதுரை:

    மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் கடந்த 12-ந்தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். பலர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பணியாற்றியவர்களில் சிலருக்கு வெடிமருந்துகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பான அடிப்படை பயிற்சி இல்லை எனவும், இதன் காரணமாகவே இந்த விபத்து நடந்து உள்ளது எனவும் தெரியவருகிறது.

    பட்டாசு ஆலைக்கான லைசென்சை ஒருவர் பெயரில் பெற்றுக்கொண்டு அதன் கீழ் பல கிளைகளாக பட்டாசு ஆலைகள் இயங்குவது அதிகரித்து வருகிறது. முறையான, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் பணியாற்றியது தான், இந்த விபத்தில் அதிக உயிர்ச்சேதம் ஏற்பட காரணமாகிவிட்டது. பட்டாசு ஆலைகளில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.

    அவர்களின் இந்த பொறுப்பற்ற, மெத்தனப் போக்கினால்தான், இது போன்ற விபத்துகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். எனவே கடந்த 12-ந்தேதி நடந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைக்கவும், இது போன்ற விபத்துகள் வரும் காலங்களில் தவிர்க்கப்பட, விதிகளை மீறும் பட்டாசு ஆலைகளின் லைசென்சை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் வக்கீல் விநாயகன் ஆஜராகி, “பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கிய இழப்பீடு மிகவும் குறைவு. இந்த தொகையை அதிகரிக்க வேண்டும்” என்று கோரினார். அதற்கு அரசு வக்கீல், “இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் தமிழக அரசு அளித்துள்ளது” என்றார்.விசாரணை முடிவில், “பட்டாசு ஆலை தொழிலை முறைப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டு விவரம் உள்ளிட்ட தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு 4 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    Next Story
    ×