search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரிமுனை பஸ் நிலையத்தில் இருந்த பஸ்கள் புறப்பட்டுச்சென்ற காட்சி.
    X
    பாரிமுனை பஸ் நிலையத்தில் இருந்த பஸ்கள் புறப்பட்டுச்சென்ற காட்சி.

    தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது- தமிழகம் முழுவதும் 50 சதவீத பஸ்கள் ஓடவில்லை

    சென்னை, கோவை, நெல்லை, விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிகாரிகள், ஊழியர்கள் என 1.25 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு படிப்படியாக பஸ் சேவை அதிகரிக்கப்பட்டு வந்தன. தற்போது பஸ் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

    இந்த நிலையில் 14-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் 2 கட்டமாக நடந்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தன. தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச். எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தை முன் எடுத்து செல்கின்றன.

    இதற்கிடையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். மேலும் வேலை நிறுத்தம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம், தொழிலாளர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைவில் முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

    அதனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்தார். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பஸ்களை இயக்க தேவையான முன்ஏற்பாடுகள் எடுக்கப்பட்டது.

    இந்தநிலையில் அதிகாலையில் இருந்து பஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளில் டிரைவர், கண்டக்டர்கள் வேலைக்கு வராமல் இருந்ததால் குறித்த நேரத்தில் பஸ்களை வெளியே எடுக்க முடியவில்லை.

    அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஆதரவு தொழிலாளர்களை கொண்டு பஸ்களை இயக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    சென்ட்ரலில் பஸ் நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்.

    இதனால் சென்னை, கோவை, நெல்லை, விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.

    ஆனாலும் பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பஸ்களை பாதுகாப்பாக இயக்க அனைத்து போக்குவரத்து கழக அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தனர். அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 7 மணிக்கு பிறகு 30 சதவீத பஸ்கள் ஒவ்வொரு நகரங்களிலும் இயக்கப்பட்டன.

    அண்ணா தொழிற்சங்க டிரைவர்-கண்டக்டர்கள் முழுமையான அளவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு சில இடங்களில் பஸ்களை இயக்க டிரைவர், கண்டக்டர்களிடம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தகராறு செய்தனர். பணிமனைகளின் முன்பு குவிந்திருந்த தொழிலாளர்கள் பஸ்களை வெளியே எடுக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனால் ஒரு சில இடங்களில் தகறாறு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை அப்புறப்படுத்தினர். காலை 10 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னையில் காலை 7 மணிவரை மிக குறைந்த அளவில் தான் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக அதிகரித்தன. சென்னையில் 31 பணிமனைகளில் இருந்தும் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.

    மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காலை 7 மணி நிலவரப்படி 50 சதவீத பஸ்களும், 9 மணி நிலவரப்படி 56 சதவீத பஸ்களும் இயக்கப்பட்டன. தொடர்ந்து அனைத்து வழித்தடங்களிலும் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி நிலவரப்படி விழுப்புரம் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 30 பஸ்கள் புறப்பட வேண்டும். அதில் 24 பஸ்கள் இயக்கப்பட்டன.

    கோயம்பேட்டில் இருந்து தினமும் 150 விழுப்புரம் போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் பயணம் தடைபடாத வகையில் பஸ் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 60 சதவீத பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பூந்தமல்லியில் 35 சதவீத பஸ்கள் இயக்கப்படுகிறது. மொத்தம் உள்ள 135 பஸ்களில் 49 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
    Next Story
    ×