search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல். முருகன்
    X
    எல். முருகன்

    ஆட்சியில் பங்கேற்பது குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்- எல். முருகன் பேட்டி

    அமைச்சரவையில் பங்கு குறித்து தேர்தலுக்கு பிறகு தேசிய தலைமை முடிவு செய்யும் என்று எல் முருகன் கூறியுள்ளார்.

    நாகர்கோவில்:

    பாரதீய ஜனதா மாநில தலைவர் முருகன் நாகர் கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நான் நாகர்கோவில் வந்துள்ளேன். கோவை மேட்டுபாளையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சி.டி. ரவி பங்கேற்றுள்ளார்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாரதீய ஜனதாவை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மூத்த தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    வருகிற 25-ந் தேதி பிரதமர் மோடி கோவையில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இது முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஆகும். எனவே இந்த பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

    28-ந் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா விழுப்புரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். தேசிய தலைவர் நட்டா, வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் குமரி மாவட்டம் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க கடினமாக வேலை செய்து வருகிறோம்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடை தேர்தலிலும், 6 சட்டமன்ற தொகுதிகளிலும், எங்களது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்.

    குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தது அவரது இயலாமையை காட்டுகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர்களாகவே ராஜினாமா செய்தனர். இதில் பாரதீய ஜனதா கட்சியின் தலையீடு கிடையாது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து பலரும் பாரதீய ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.

    சமையல் கியாஸ் விலை கடந்த 2013-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது குறைவாகவே உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தமட்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையை கருத்தில் கொண்டே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    தமிழக அரசும், மத்திய அரசும் பெட்ரோல் டீசல் விலையைகட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு வரும்.

    அதேபோல் காவிரி- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு கர்நாடகா முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக நலனே பாரதீய ஜனதாவுக்கு முக்கிய மாகும். ஆகவே எங்களது நலனை விட்டுக் கொடுக்க முடியாது.

    காங்கிரசை ராகுல்காந்தி ஒழித்து வருகிறார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளார். தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி இல்லாமல் ஆகி விடும். தமிழக அரசு ஏராளமான நல்ல திட்டங்களை செய்து வருகிறது. அதை மக்களிடம் கொண்டு செல்லவே விளம்பரம் செய்யப்படுகிறது. அதில் தவறு இல்லை.

    பாரதீய ஜனதா கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது என்பதை விட, எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதே எங்களின் நோக்கமாகும். நாங்கள் இரட்டை இலக்க உறுப்பினர்களுடன் சட்டமன்றத்தில் இருப்போம்.

    அமைச்சரவையில் பங்கு குறித்து தேர்தலுக்கு பிறகு தேசிய தலைமை முடிவு செய்யும். கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதாவின் இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? என்பது குறித்தும் தேசிய தலைமையே முடிவு எடுக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை பணிகள் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

    Next Story
    ×