search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக உறுப்பினர்கள்
    X
    திமுக உறுப்பினர்கள்

    தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம்- துரைமுருகன்

    தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காலை 10.55 மணிக்கு வந்தார்.

    இதேபோல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் துரைமுருகன் தலைமையில் முன் கூட்டியே சட்டசபைக்கு வந்து அமர்ந்து இருந்தனர்.

    இன்றைய கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வரவில்லை. 11 மணிக்கு சபாநாயகர் வந்ததும் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. அப்போது இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து சில கருத்துக்களை பேச முற்பட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. துணை முதல்-அமைச்சரை பட்ஜெட் வாசிக்க அனுமதி அளித்துவிட்டேன். எனவே இப்போது உங்களை பேச அனுமதிக்க இயலாது என்று துரைமுருகனை பார்த்து சபாநாயகர் கூறினார்.

    ஆனாலும் துரைமுருகன் அ.தி.மு.க. அரசை பற்றி சில கருத்துக்களை பேச தொடங்கினார். ஆனால் அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இந்த சமயத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தொடரை தொடர்ந்து வாசித்தார்.

    இதனால் அவையில் துரைமுருகன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிறிது நேரம் நின்று கொண்டே இருந்தனர். ஆனாலும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால் பட்ஜெட் உரையை புறக்கணித்து துரைமுருகன் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    அதைத்தொடர்ந்து சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெளி நடப்பு செய்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அமைப்புகளும் வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இடைக்கால நிதிநிலை அறிக்கையை தி.மு.க. புறக்கணிக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நிதிநிலை அறிக்கை பற்றி சபையில் தெரிவிக்கும் போது தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த ஆட்சியில் ரூ.5.70 லட்சம் கோடி கடன் இருக்கிறது.

    தமிழ்நாட்டில் இந்த ஆட்சியில் நிதி நிர்வாகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு தற்போது தமிழக அரசுக்கு இருக்கும் கடனே உதாரணம்.

    இந்த கடன் நெருக்கடியில் அ.தி.மு.க. ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழக மக்கள் வேதனைப்படும் அளவுக்கு கடன் இருப்பது வெட்கக் கேடானது. இந்த அரசு தேவையானவற்றுக்கு செலவு செய்யாமல் தேவை இல்லாமல் கண்மூடித்தனமாக செலவு செய்கிறது.

    கொரோனா காலத்தில் மக்கள் தவித்த போது எந்த உதவியும் செய்யவில்லை. இப்போது தேர்தல் வருவதால் புதுப்புது விதமாக நிதிகளை அறிவிக்கிறது. மக்களை ஏமாற்ற பார்க்கிறது. தேர்தலுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. இந்த அரசு அஜாக்கிரதையாக பொருளாதாரத்தை கையாளுகிறது.

    கடந்த 10 ஆண்டுகளாக கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அனைத்து துறைகளும் படுபாதாளத்தை நோக்கி செல்கிறது. நிதி மேலாண்மைக்கு எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிதிநிலை மேலாண்மை சரிசெய்யப்படும். தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை கொடுப்போம். மு.க.ஸ்டாலின் இதுவரை 152 தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்துள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளை பார்க்கும் போது இந்த அரசு தகுதி இல்லாத அரசு என்பது உறுதியாகி இருக்கிறது.

    110 விதியின் கீழ் ஜெயலலிதாவும், அதைத்தொடர்ந்து இன்றைய முதல்-மந்திரியும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள். எதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. புதுச்சேரியில் மத்திய பா.ஜனதா அரசு ஜனநாயக படுகொலை செய்து இருக்கிறது.

    தமிழகஅரசு ஊழல் மிகுந்த அரசாக இருக்கிறது. வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும். மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி அமையும். இந்த இடைக்கால பட்ஜெட் கடன் நிறைந்த அரசின் பட்ஜெட். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் தி.மு.க. புறக்கணிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நிதியே இல்லாத நிலையில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இந்த அரசு தாக்கல் செய்து இருக்கிறது ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் பற்றாக்குறை உள்ளது. அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதற்கு ஒதுக்க நிதி இல்லை.

    முதல்-அமைச்சர் தொடர்ந்து பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் தேர்தலுக்காக வெளியிட்டு வருகிறார். அவை எதையும் நிறைவேற்ற முடியாது. தேர்தலுக்காக மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் நல்ல பதிலை அளிப்பார்கள். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதையும் நாங்களும் புறக்கணிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கரும் இதே கருத்துக்களை தெரிவித்தார். கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக தெரிவித்தார்.

    Next Story
    ×