
தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை கோட்டத்தில் மதுரையில் இருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லைக்கு இரட்டை அகல ரெயில் பாதை பணி நடந்து வருகிறது. இதில் வாஞ்சி மணியாச்சி-தட்டப்பாறை, கங்கைகொண்டான் இடையே பணிகள் முழுமையாக முடிந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஒப்புதலின்பேரில் போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. இதற்கிடையே கோவில்பட்டி-கடம்பூர் இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகல ரெயில்பாதையை பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக பெங்களூருவில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை இந்த பணிகளை ஆய்வு செய்கிறார்.
அதன்படி, வருகிற 26-ந் தேதி கோவில்பட்டி-கடம்பூர் இடையேயான மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகல ரெயில் பாதையையும், 27-ந் தேதி கங்கைகொண்டான்-நெல்லை இடையேயான மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகல ரெயில்பாதையையும் ஆய்வு செய்கிறார்.
அதனை தொடர்ந்து வருகிற 28-ந் தேதி புதிதாக போடப்பட்டுள்ள அகலப்பாதையில் வேகச்சோதனை நடத்துகிறார்.