search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் கூடுதல் நீதிமன்றம் திறப்பு விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி கலந்து கொண்டபோது எடுத்தபடம்
    X
    திருப்பூரில் கூடுதல் நீதிமன்றம் திறப்பு விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி கலந்து கொண்டபோது எடுத்தபடம்

    புதிதாக 2 கூடுதல் நீதிமன்றங்கள் - காணொலி காட்சி மூலம் தலைமை நீதிபதி திறந்து வைத்தார்

    திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 2 கூடுதல் நீதிமன்றங்களை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி காணொலிகாட்சி மூலமாக திறந்து வைத்தார்.
    திருப்பூர்:

    திருப்பூரில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் கூடுதல் மகளிர் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்று மாலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த 2 கோர்ட்டுகளையும் சென்னையில் இருந்தபடி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “நீதிக்காக மக்கள் நீதிமன்றத்தை நம்பி உள்ளனர். உரிய நேரத்தில் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு வக்கீல்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ”என்றார்.

    புதிதாக திறக்கப்பட்டுள்ள கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துக்கு 737 வழக்குகளும், கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் 187 வழக்குகளும் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த விழாவில்காணொலிகாட்சி மூலமாக ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சுந்தர், ஆஷா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். திருப்பூர் கோர்ட்டு வளாகத்தில் நடந்த விழாவுக்கு வந்தவர்களை முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி வரவேற்றார். கலெக்டர் விஜயகார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள் பழனிசாமி, சுப்பிரமணியம், பக்தபிரகலாதன், ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

    விழாவில் நீதிபதிகள் நாகராஜன், கோவிந்தராஜன், ஜெயந்தி, அனுராதா, ஸ்ரீவித்யா, கவியரசன், நித்யகலா, உதயசூர்யா, ராமநாதன், கார்த்திகேயன்,விக்னேஸ் மாது மற்றும் மாவட்ட அரசு வக்கீல்கே.என்.சுப்பிரமணியம், பெண் வக்கீல்கள், வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் நீதிபதி பிரிஸ்னவ் நன்றி கூறினார்.
    Next Story
    ×