
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னை ராயப்பேட்டை தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி, கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார்கள்.
ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கட்சி நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் கண்தானம், ரத்தானம், மருத்துவ முகாம், கவிதை -கட்டுரை போட்டி, விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்கள் நடத்தி வைத்தல், முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல், வேட்டி- சேலை உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தலைமை கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.