search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை- கேஎஸ் அழகிரி

    திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

    நாகர்கோவில்:

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 1-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். இது தொடர்பாக நாகர்கோவிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலர் விற்ற போது அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ரூபாய் 71-க்கு பெட்ரோல் விற்பனை செய்தார் . ஆனால் இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 54 டாலர் விற்பனையாகும் போது ரூ.100-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

    இதிலிருந்து காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் நன்றாக தெரியும்.

    பிரதமர் மோடி மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதிய பிரச்சினைகளை கிளப்பி இதையெல்லாம் மூடி மறைக்கிறார். அவரால் நாட்டின் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. உதாரணமாக 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியவில்லை.

    தமிழகத்தில் எடப்பாடி அரசு முழுமையான தோல்வியடைந்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஒரு லட்சத்துக்கு அதிகமான வழக்குகளை வாபஸ் வாங்கி உள்ளேன் என்று எடப்பாடி கூறியுள்ளார்.

    அவரே வழக்குப் போட்டார், அவரே வாபஸ் பெற்று உள்ளார். இதில் என்ன பெருமை இருக்கிறது. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த ஏராளமான போராட்டங்களுக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார்.

    எனவே இந்த வழக்கை வாபஸ் பெற்று விட்டு அதனால் சிறுபான்மை இன மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று கூறுவது என்ன நியாயம்? வழக்கை வாபஸ் பெற்றதற்காக சிறுபான்மையின மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அந்த பிரச்சினையை தீர்க்க எடப்பாடி முயற்சி செய்வார் என்றால் அவருக்கு சிறுபான்மை மக்கள் வாக்களிப்பார்கள்.

    இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

    ஆனால் அவர்களது கோரிக்கைகள் என்ன ஆனது? அதுபோன்று அரசு ஊழியர்களுக்கும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது தவிர அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

    எடப்பாடி அரசு ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது தான் காவிரி குண்டாறு திட்டம் நினைவுக்கு வருகிறதா? நீங்கள் ஆட்சியில் இருக்கும்போதே இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாமே?

    எய்ம்ஸ் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள், அந்த அடிக்கல்லையே காணவில்லையே. அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? காவிரி குண்டாறு அடிக்கல் மட்டும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறது.

    தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் பாஜகவால் காலூன்ற முடியாது. ஒரு ஜனநாயகப் படுகொலையை புதுச்சேரியை பொறுத் தவரையில் ஆரம்பத்திலே இருந்தே மத்திய அரசு செய்து வருகிறது. இதற்காக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். முதலமைச்சரின் அன்றாட பணிகளில் அவர் தலையிட்டார்.

    தனது உதவியாளரை கூட நியமனம் செய்ய முடியாத சூழல் அங்கு இருந்தது. மக்களுக்கு முதலில் புரியவில்லை இப்போது அது பாஜகவின் மீதான வெறுப்பாக மாறி உள்ளது . அதனால் கிரண்பேடியை அனுப்பிவிட்டார்கள்.

    தி.மு.க. கூட்டணி ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டு விட்டது. இனிமேல் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பில்லை.

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து வருகிற 24-ந் தேதி நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

    கமல், ரஜினி சந்திப்பு நண்பர்களுடனான சந்திப்பு. காங்கிரஸ் கட்சி சார்பில் புதியவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும், சிறப்பாக செயல்பட்டு வருவோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×