search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கோதாவரி-காவிரி ஆறுகள் இணைப்பை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை

    தமிழகம், தெலுங்கானா, ஆந்திர மாநில மக்கள் பயனடையும் வகையில் கோதாவரி-காவிரி ஆறுகள் இணைப்பை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
    சென்னை:

    டெல்லியில் நிதி ஆயோக்கின் 6-வது ஆட்சிக்குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் காணொலிக்காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தமிழகம் மேற்கொண்ட நடவடிக்கை போல மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

    மத்திய அரசு வெளியிட்ட, நல்ல நிர்வாகத்தை வழங்கும் மாநிலங்களின் வரிசை பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ரூ.22 ஆயிரத்து 332 கோடி முதலீடுகளையும், அதனால் வரக்கூடிய 76 ஆயிரத்து 835 வேலை வாய்ப்புகளையும் வலைதள ஒற்றைச்சாரளம் மூலமாக தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

    சென்னை அருகே 150 ஏக்கர் நிலப்பரப்பில் பல்நோக்கு மாதிரி ‘லாஜிஸ்டிக்' பூங்கா ஒன்றை அரசு நிறுவி வருகிறது. 2019-ம் ஆண்டில் இருந்தே பிரதான தொழில்களின் 453 திட்டங்களின் மூலம் ரூ.4.07 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததோடு, அதன்மூலம் 13 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் அரசு உறுதி செய்துள்ளது.

    தமிழக அரசு தொழில் கொள்கைகள், தொழிற்சாலைகளில் அதிக வேலை வாய்ப்புகள் பெற்றுத்தரும். விவசாயிகளை மையப்படுத்தி நடைபெறும் குடிமராமத்து திட்டம் மூலம் ரூ.1,418 கோடி செலவில் 6,211 பணிகள் நடைபெற்றன.

    கோதாவரி-காவிரி ஆறுகள் இணைப்பை தேசிய திட்டமாக பிரதமர் அறிவிக்க வேண்டும். இதன்மூலம் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயனடைவர்.

    காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதுடன் விரைவாக தமிழக அரசுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்.

    பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 54.12 லட்சம் விவசாயிகளுக்கு 9,365 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் ஆத்மநிர்பார் திட்டத்தின் நோக்கத்திற்கு தமிழகம் தன்னை அர்ப்பணித்துள்ளது. மின்சாரத்திற்கான காற்றாலை நிறுவுவதில் முதலிடத்தையும், சூரிய சக்தி மின்சார திட்டத்தில் 3-ம் இடத்தையும் தமிழகம் பெற்றுள்ளது.

    கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை தமிழக அரசு அளித்து வருகிறது. 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், 2021-22-ம் கல்வி ஆண்டில் இருந்து மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது.

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 60 லட்சம் மடிக்கணினிகளை அரசு வழங்கியுள்ளது. வேலை அளிப்போரையும், வேலை தேடுவோரையும் ஒரே தளத்தில் கொண்டு வரும் இணையதளத்தை அரசு தொடங்கியுள்ளது.

    பொதுமக்கள் தங்களின் குறைகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த ‘ஹெல்ப்லைன்’ திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. அரசின் இணையதளங்கள் அல்லாமல் 10 லட்சம் பேர் இ-சேவை பொது சேவை மையங்கள் மூலம் பயனடைகின்றனர். ஆயுஷ் துறைக்கு மத்திய அளவில் ஒதுக்கப்படும் நிதியை உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×