search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து : தமிழக அரசு அரசாணை வெளியீடு

    ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
    சென்னை:

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. போராட்டத்தின் எழுச்சியால், தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தை இயற்றியதோடு, உடனடியாக அதற்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதலும் வாங்கியது. இதனால் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் ஒரு சாரர் மட்டும் போராட்டத்தை கைவிட மறுத்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையால் ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

    இதேபோன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஆங்காங்கே மோதல்கள், வன்முறைகள் வெடித்தன. அந்தச் சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அதுதொடர் பான விசாரணையும் நடந்து வந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப்படும் என்று கடந்த 5-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

    அவரது அறிவிப்பை உறுதிசெய்யும் வகையில், 308 ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான அரசாணையை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்று பிறப்பித்துள்ளார்.

    அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திருப்பப்பெறப்படும் என்று தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்தார். இதுதொடர்பாக அரசுக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி., ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட 308 வழக்குகள் குறித்த விவரங்களை அளித்துள்ளார். அவற்றை திரும்பப்பெறலாம் என்று அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த வழக்குகளை கைவிடுவது சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டின் அரசு குற்றவியல் தலைமை வக்கீல் கருத்து அளித்துள்ளார். அதில், விசாரணை நிலுவையில் இருக்கும் வழக்குகளை, வழக்குப்பதிவு செய்த சம்பந்தப்பட்ட போலீசாரே முடித்துவிடலாம்.

    கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணைக்காக நிலுவையில் உள்ள வழக்குகளைப் பொறுத்தவரை, அவற்றை திரும்பப் பெறுவதற்கான மனுவை சம்பந்தப்பட்ட அரசு உதவி வக்கீல் அந்த கோர்ட்டுகளில் தாக்கல் செய்ய வேண்டும்.

    கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சில வழக்குகள், இந்திய ரெயில்வே சட்டங்களின் கீழ் தொடரப்பட்டுள்ளன. எனவே அது போன்ற வழக்குகளில் மத்திய அரசின் அனுமதியைப் பெற்று, வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு உதவி வக்கீல்கள் மேற்கொள்ளவேண்டும்.

    மற்ற வழக்குகளில் மத்திய அரசின் அனுமதியைப்பெற அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.

    அதை அரசு கவனத்துடன் பரிசீலித்து, 308 ஜல்லிக்கட்டு வழக்குகளையும் திரும்பப் பெற உத்தரவிடுகிறது. தமிழகம் முழுவதும் 308 வழக்குகளில் மொத்தம் 26 ஆயிரத்து 460 பேர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். இந்த வழக்குகளில், போலீஸ் விசாரணையில் உள்ள வழக்குகள் 281 ஆகும். 27 வழக்குகள் கோர்ட்டு விசாரணையில் உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×