search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகுமார்
    X
    சசிகுமார்

    பெயிண்டரை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை- தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு

    விபத்தில் தனது கால் இழந்ததற்கு காரணம் என கருதி பெயிண்டரை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை அருகே மானோஜியப்பா வீதி பட்டுகோசாமி வட்டாரம் பகுதியை சேர்ந்தவர் குமாரவேலு. இவருடைய மகன் சங்கர்(வயது 41). இவர், பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரும், மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் காலனி கனகசபை நகர் 1-ம் தெருவை சேர்ந்த சசிகுமாரும்(49) நண்பர்களாக இருந்தனர்.

    கடந்த 2010-ம் ஆண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சசிகுமாரின் கால் உடைந்தது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகுமாரை ஒருமுறை கூட சங்கர் சென்று பார்க்காததால், விபத்தில் தனது கால் இழந்ததற்கு அவர் தான் காரணம் என கருதி கோபத்துடன் இருந்தார்.

    இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் இருவரும் பிரிந்து சென்று விட்டனர். அதன்பிறகு சசிகுமார் எங்கே சென்றாலும் ஆட்டோவில்தான் சென்று வந்தார். இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி பழைய பஸ் நிலையம் அருகே சங்கரும், சசிகுமாரும் எதிர்பாராத விதமாக மீண்டும் சந்தித்து கொண்டனர்.

    அப்போது பேசிக்கொண்ட இருவரும் ஆட்டோவில் ஏறி மது குடிப்பதற்காக டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு மது அருந்தியதுடன் மதுப்பாட்டில்களை வாங்கிய சசிகுமார், சங்கரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு மீண்டும் இருவரும் மது அருந்தினர். அப்போது விபத்து நடந்த பிறகு என்னை ஏன் வந்து பார்க்கவில்லை? எனவும், விபத்து பற்றி உனக்கு தெரியும் எனவும் சங்கரிடம் சசிகுமார் கேள்வி எழுப்பினார்.

    இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சசிகுமார் அருகில் கிடந்த இரும்பு குழாயை எடுத்து சங்கரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் சங்கர் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். மேலும் கத்தியாலும் அவரை சசிகுமார் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் துடி, துடித்து இறந்தார்.

    இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர். தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை நீதிபதி மதுசூதனன் விசாரணை செய்து சசிகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட சங்கர் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்தார்.
    Next Story
    ×