
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுக்குப்பம், தேத்தாம்பட்டு, கண்டியான்குப்பம், பேரூர், மதகளிர் மாணிக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்தமழை கொட்டியது. சுமார் 2 மணிநேரம் பெய்த கன மழையின் காரணமாக அந்தபகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து சென்றனர்.
அங்கு நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவிலான நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு வெளியே அடுக்கி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த திடீர் மழையின் காரணமாக விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமடைந்தன.
இதேபோல் கூடலையாத்தூர், எசனூர், குணமங்கலம், டி.ஆதிவராகநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களின் வெளியே விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரும் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு நெல் கொள்முதல் நிலையங்களில் இடம் அமைத்து தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முத்தாண்டிகுப்பம், புதுக்குப்பம், கண்டரகோட்டை, அண்ணாகிராமம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 11 மணி அளவில் சாரல் மழை பெய்தது. இந்த மழை அதிகாலைவரை விட்டு விட்டு பெய்துகொண்டே இருந்தது.
இன்று காலையும் லேசாக சாரல் மழை பெய்ததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றனர். கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழைபெய்து வருகிறது.