search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    கோவில்களில் திருவிழாக்கள் நடத்துவது குறித்து 22-ந்தேதி ஆலோசனை: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

    ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் பிற கோவில்களில் நடத்தப்பட வேண்டிய திருவிழாக்கள் குறித்து விவாதிக்க வருகிற 22-ந்தேதி மதகுருமார்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது குறித்து, மதகுருமார்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்க உள்ள விழாக்கள், பண்டிகைகள் எப்படி நடத்துவது? என்பது குறித்து, மதகுருமார்களுடன் கலந்து பேசி, அறிக்கை அளிக்க கடந்த மாதம் உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கொரோனா காரணமாக மதகுருமார்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த முடியாது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு, இந்துசமய அறநிலையத்துறை ஆணையரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலைய துறை ஆணையர் பிரபாகர் ஆஜரானார். அறநிலைய துறை சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், சிறப்பு அரசு பிளீடர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    அப்போது அவர்கள், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட கோவில்களில் திருவிழாக்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்க 45 மதகுருமார்கள், கோவில் அறங்காவலர்கள், தீர்த்தகாரர்கள், ஸ்தலத்தாரர்கள் கூட்டத்தை வருகிற 22-ந்தேதி அதிகாரிகள் கூட்ட உள்ளனர் என்றனர்.

    மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் குறுக்கிட்டு, கோவில் அறங்காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள நிலையில், சென்னையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

    அதில் கலந்து கொள்வதில் சிரமம் உள்ளதால், ஸ்ரீரங்கத்திலேயே இந்த கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து, ‘‘இந்த ஆலோசனை கூட்டத்தை காணொலி காட்சி வாயிலாகவும், நேரிலும் நடத்த வேண்டும் என அறநிலைய துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள், நேரிலும், ஆன்லைன் மூலமும் கலந்து கொள்ளலாம் எனவும், ஆன்லைன் முகவரியை அறநிலைய துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற ஏப்ரல் 9-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×