search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மினி வேனில் விற்கப்பட்ட சின்ன வெங்காயம்
    X
    மினி வேனில் விற்கப்பட்ட சின்ன வெங்காயம்

    தஞ்சையில் தொடர்ந்து ஏறுமுகம்- சின்ன வெங்காயம் விலை மேலும் உயர்வு

    தஞ்சையில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவால் விலை அதிகரித்து காணப்படுகிறது. கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    தஞ்சாவூர்:

    சின்ன வெங்காயம் அளவில் தான் சிறியது, அதன் குணங்கள் மிகப்பெரிய நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. சின்ன வெங்காயத்திற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருச்சி போன்ற பல்வேறு இடங்களில் மிக பெரிய அளவில் சந்தைகள் உள்ளன.

    திருநெல்வேலி, அரியலூர், பெரம்பலூர், மதுரை போன்ற தென்மாவட்டங்களில் உற்பத்தியாகும் சின்ன வெங்காயம் இந்த சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. சின்ன வெங்காயத்தை வெட்டும் போது தான் அனைவருக்கும் கண்ணீர் வரும், ஆனால் வெங்காயத்தின் விலையை கேட்டாலே அனைவருக்கும் கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பருவம் தவறி பெய்த மழையால் அரியலூர், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் வரத்து குறைந்துள்ளது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    தஞ்சையில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தின் வரத்து குறைவால் சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.80-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பெரிய வெங்காயம் என்று அழைக்கப்படும் பல்லாரியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்த வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் அவற்றை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

    இதுகுறித்து வியாபாரி கூறும்போது, ‘கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் அரியலூர், பெரம்பலூர், தென்காசி போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும்.

    ஆனால் தற்போது பெங்களூருவில் இருந்து மட்டுமே வருகிறது. வரத்து குறைவால் விலை அதிகாரித்துள்ளது. தஞ்சைக்கு 5 லாரிகளில் வரும் வெங்காயம் தற்போது 1 லாரியில் மட்டுமே வருகிறது’ என்றார்.
    Next Story
    ×