
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தாதாபுரம் ஊராட்சி, ஆதிக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோபால்(54). காய்கறி வியாபாரி. இவரது மனைவி மணி, கரும்பு வெட்டும் தொழிலாளியாக உள்ளார். இவர்களது மகள் பிரியா(15), மகன் கண்ணன். மணி கரும்பு வெட்டும் பணிக்காக வெளியூரில் தங்கி வேலை பார்த்துவந்தார். அவரது மகன் கண்ணன் வெளியூரில் உள்ள ஓர் பேக்கரிக் கடையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.
கோபால் தள்ளுவண்டி மூலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். பிரியா, அருகில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு பிரியாவும், கோபாலும் வீட்டில் இருந்தனர். அப்போது பிரியாவுக்கும் கோபாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை கோபால் தனது வீட்டின் முன் இறந்து கிடந்தார்.
அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன. வீடும் பூட்டிய நிலையில் காணப்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்ற பார்த்தனர். அங்கு கோபாலின் மகள் பிரியா படுகாயத்துடன் இறந்து கிடந்தது கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். பிரியாவின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் அருகில் சிறிய கத்தி மற்றும் சுத்தியல் கிடந்தது. இது தொடர்பாக எடப்பாடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபால், பிரியா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோபால் மகள் பிரியாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
சமீபகாலமாக கோபாலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டதாகவும், இதனால் அவர் மகளை கொலை செய்தாரா? அல்லது மர்மநபர்கள் யாரேனும் தந்தை, மகள் இருவரையும் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோபாலின் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தை சங்ககிரி டி.எஸ்.பி. ரமேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் பார்வையிட்டனர். கொலை நடந்த பகுதிக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது.
அது மோப்பம் பிடித்தபடி அந்த பகுதியில் சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிந்த கோபாலின் மனைவி மணி சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.