search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ஆத்தூரில் முகமூடி கும்பல் அட்டகாசம்: வீடு புகுந்து 10 பவுன் நகை-பணம் கொள்ளை

    வீரகனூர் பகுதியில் ஆத்தூர் தலைவாசல் உட்பட பல பகுதிகளில் சமீபகாலமாக இதே போல முகமூடி அணிந்த கும்பல் வீட்டிற்குள் புகுந்து அவர்களை கட்டிப்போட்டு நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த அமராவதி (வயது 60). இவரது மகள் ருக்குமணி (40), இவர்கள் அந்த பகுதியில் புதுசாக பிளாட் போட்டு இருந்த இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று இரவு அமராவதி தனது மகள் ருக்குமணி, பேத்தி மாலினி (19) ஆகியோருடன் வீட்டில் படுத்திருந்தார். நள்ளிரவு முகமூடி அணிந்த 6 பேர் கும்பல் அமராவதியின் வீட்டு முன்பக்க கதவை தட்டினர். இதனால் அச்சம் அடைந்த வீட்டிற்குள் இருந்தவர்கள் பின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டிற்குள் அந்த கும்பல் புகுந்தது. முகமூடி மற்றும் குரங்கு குல்லா அணிந்திருந்த அந்த கும்பல் கையில் உருட்டு கட்டை, அரிவாள் உட்பட பல ஆயுதங்களை வைத்திருந்தனர்.

    பின்னர் அமராவதி உள்பட 3 பேரின் வாயில் துணியை திணித்த கும்பல் அவர்களை மிரட்டி அங்கு உட்கார வைத்தனர். தொடர்ந்து அவர்கள் கண் முன்பே வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் அந்த கும்பல் எடுத்து விட்டு அங்கிருந்து தப்பியது . இதனை அறிந்த அந்த பகுதியினர் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற ஆத்தூர் டிஎஸ்பி இம்மானுவேல், இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் சம்பவம் கு றித்து விசாரித்தனர். மேலும் அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்கள். மேலும் போலீஸ் மோப்ப நாய் மேகா அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. சம்பவ இடத்தை மோப்பம் பிடித்த நாய் சிறிதுதூரம் ஓடி நின்றது.

    வீரகனூர் பகுதியில் ஆத்தூர் தலைவாசல் உட்பட பல பகுதிகளில் சமீபகாலமாக இதே போல முகமூடி அணிந்த கும்பல் வீட்டிற்குள் புகுந்து அவர்களை கட்டிப்போட்டு நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருகிறது. அதே நிலையில் தற்போது ஆத்தூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதி போலீசார் கொள்ளையர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×