search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணைக்கு நீர்வரத்து இல்லாததால் 58-ம் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைப்பு

    வைகை அணை நீர்மட்டம் சரிந்து வருவதால் 58-ம் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 50 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் விருவீடு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதுதவிர மதுரை மாவட்டத்திற்கு கால்வாய், ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வைகை அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வந்தது. இதனையடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாக முழுக்கொள்ளளவில் இருந்த வைகை அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது கொண்டே வருகிறது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 67.67 அடியாக உள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 503 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கும், 58-ம் கால்வாயிலும், மதுரை மாநகர் குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 719 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வருவதால் அணை நீர்மட்டம் சரிந்து கொண்டே வருகிறது.

    வைகை அணை நீர்மட்டம் 67 அடிக்கு கீழே சரிந்ததால் 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாது. தற்போது அணை நீர்மட்டம் சரிந்து வருவதால் 58-ம் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 50 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கமுடியும். கடந்த ஒரு மாதத்தில் 310 மில்லியன் கனஅடி தண்ணீர் 58-ம் கால்வாய் வழியாக திறக்கப்பட்டுள்ளது என்றனர்.
    Next Story
    ×