search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தபோது எடுத்த படம்.
    X
    நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தபோது எடுத்த படம்.

    நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.17¾ லட்சம்

    நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.17¾ லட்சம், 174 கிராம் தங்கமும் கிடைத்தது.
    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கொரோனா தடையை நீக்கியபிறகு பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் பக்தர்களின் காணிக்கை பணம் நிரம்பியது.

    இதையடுத்து நேற்று கோவில் உண்டியல்களை திறந்து காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. கோவிலில் உள்ள 21 நிரந்தர உண்டியல்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி திறந்து எண்ணப்பட்டன. அதன் பிறகு நேற்று மீண்டும் உண்டியல்கள் திறக்கப்பட்டன.

    கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நெல்லை மேற்கு பிரிவு ஆய்வர் கண்ணன், தக்கார் பிரதிநிதி பாளையங்கோட்டை மேற்கு பிரிவு ஆய்வர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.

    அதில் கிடைத்த காணிக்கை பணம், பொருட்கள் அம்பாள் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சொக்கலிங்கம், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

    இதில் 17 லட்சத்து 71 ஆயிரத்து 256 ரூபாய் ரொக்கமும், 174 கிராம் எடை உள்ள பல மாற்று தங்க பொருட்களும், 256 கிராம் எடை உள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் கிடைத்தது. மேலும் ஒரு வெளிநாட்டு பணமும் கிடைத்தது.இதற்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உண்டியல் திறக்கப்பட்ட போது ரூ.7 லட்சம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×