search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    23 கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 8.5 லட்சம் மனுக்களை வாங்கிய மு.க.ஸ்டாலின்

    ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார நிகழ்ச்சி மூலம் 23 கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களை மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார். 4-ம் கட்ட பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த பல மாதங்களாகவே தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நேரடியாக போய், தி.மு.க.வினர் உதவி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இதில், 40 நாட்களில் 18 லட்சத்து 52 ஆயிரத்து 284 கோரிக்கைகள் பொதுமக்களிடம் இருந்து வந்திருந்தன. அதைத்தொடர்ந்து, 76 லட்சம் உணவு பொட்டலங்கள், 51 லட்சம் முக கவசம் மற்றும் ‘சானிடைசர்’கள், 28 லட்சத்து 74 ஆயிரத்து 695 சமையல் செய்யப்பட்ட உணவு வகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

    இதுதவிர 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன. தொடர்ந்து, ‘எல்லோரும் நம்முடன்’ என்ற திட்டத்தின் கீழ் இணையவழி மூலமாக தி.மு.க.வில் புதிதாக உறுப்பினர் சேர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 44 லட்சத்து 19 ஆயிரத்து 644 பேர் புதிதாக தி.மு.க.வில் சேர்ந்தனர். இதையடுத்து, பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் நேரடியாக 5 லட்சம் கடிதங்களை மு.க.ஸ்டாலின் எழுதினார். அந்த கடிதத்தில், “நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து, அ.தி.மு.க. அரசை அகற்றி, தி.மு.க. அரசை ஏற்போம். விடியும் வா” என்று எழுதியிருந்தார்.

    தொடர்ந்து மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் ‘மக்கள் கிராமசபை' கூட்டங்களை நடத்தினர். தொடர்ந்து ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் 20 தலைவர்கள் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களை கூடத்தி, தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டனர். தற்போது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறார்.

    “உங்கள் குறைகளை தீர்ப்பதே எனது முதல் பணி. இதற்கு நான் பொறுப்பு” என்று கூறி அனைத்து இடங்களிலும், மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி போடும் வகையில் ஒரு பெட்டியை வைக்கிறார். அதில், மக்கள் தங்கள் குறைகளை போட்ட உடன், அவர்கள் முன்னாலேயே பூட்டு போட்டுவிடுகிறார். “தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன் இந்த குறைகளை தீர்க்க தனி துறை அமைக்கப்படும். நானே இந்த பெட்டியை திறந்து, அந்த மனுக்களை, அந்த துறையிடம் ஒப்படைப்பேன். 100 நாட்களில் குறைகள் தீர்க்கப்படும். இல்லை என்றால் அதகுறித்த தகவல் மக்களுக்கு தெரிவிக்கப்படும்” என்று கூட்டங்களில் கூறி வருகிறார்.

    இதுவரையில் 3 கட்ட பிரசாரம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், 110 தொகுதிகளை உள்ளடக்கிய 23 மாவட்டங்களில் இந்த பிரசார கூட்டங்களை நடத்தியிருக்கிறார்.

    இந்த கூட்டங்களில் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறைதீர்க்கும் மனுக்களை பொதுமக்களிடம் வாங்கி, பெட்டிகளில் வைத்து பூட்டியிருக்கிறார். இதில், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், விஜயபஸ்கர், ராஜேந்திரபாலாஜி, கே.பாண்டியராஜன், சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் தொகுதிகளில் பொதுமக்கள் அதிக மனுக்களை பெட்டிகளில் போடப்பட்டுள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    4-ம் கட்டமாக இன்று (புதன்கிழமை) முதல் 22-ந் தேதி வரை மதுரை வடக்கு, தெற்கு, தேனி வடக்கு, தெற்கு, கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, கோவை வடக்கு, நீலகிரி, கோவை கிழக்கு, தெற்கு, திருப்பூர் கிழக்கு, தெற்கு, வடக்கு, மத்தி, ஈரோடு தெற்கு, வடக்கு, சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி பிரசார கூட்டத்தை நடத்தி, பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெறுகிறார்.
    Next Story
    ×