search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனையா கோவில் தோப்பு பகுதியில் சிதைந்த நிலையில் உள்ள சாலை.
    X
    சோனையா கோவில் தோப்பு பகுதியில் சிதைந்த நிலையில் உள்ள சாலை.

    தரமற்ற சாலைகள், ஆக்கிரமிப்பு: ஆரப்பாளையம் சாலையில் திணறும் வாகனங்கள்

    ஆரப்பாளையம் பஸ் நிலைய சாலை தரமற்ற நிலையில் இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறி வருகின்றன.
    மதுரை:

    மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து தேனி, திண்டுக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி மேற்கு புறத்தில் செல்லும் டி.டி. சாலை வழியாக பை-பாஸ் சாலைக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் டி.டி. சாலை குண்டும் குழியுமாக சகதியோடு காட்சியளித்தது. இதனையடுத்து, இந்த சாலையில் பழைய சாலையை தோண்டி எடுக்காமல் புதிய சாலை அமைக்கப்பட்டது.

    அவசர கதியில் அமைக்கப்பட்ட இந்த சாலை சீரற்ற நிலையில் இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறி வருகின்றன.

    இதேபோல் பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சோனையா கோவில் தோப்பு முதல் கிராஸ் ரோடு வரையிலான சாலையும் குண்டும், குழியுமாக தரமற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த 2 சாலைகளையும் ஒட்டி ஏராளமான குடியிருப்புகளும், பள்ளிகளும், மருத்துவமனைகளும் உள்ளன. இந்த பகுதி மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலால் தவித்து வருகின்றனர்.

    ஆரப்பாளையம் பஸ் நிலையம் தற்போது அமைந்துள்ள இடம் கடும் நெருக்கடியான பகுதியாகும். இந்த இடத்தில் தற்காலிகமாக செயல்படும் வகையில்தான் முன்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தை நகரின் மேற்குப் பகுதியில் வேறு ஏதாவது இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை எழுந்துள்ளது.

    மதுரை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் இதனை செயல்படுத்த முயற்சி எடுத்தனர். ஆனால், இதுவரை செயல்படுத்தவில்லை.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து ஆரப்பாளையம் பஸ் நிலையத்தை ஒட்டிய சாலைகளை தரமாக அமைத்து, சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வாகனப் போக்குவரத்தை எளிதாக்க வேண்டும். அது இயலாத நிலையில், ஆரப்பாளையம் பஸ் நிலையத்தை நகரின் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×