search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    முதல்-அமைச்சரின் உதவி மையத்திற்கு 3 நாட்களில் 57 ஆயிரம் புகார் அழைப்புகள் குவிந்தன

    முதல்-அமைச்சரின் உதவி மையத்துக்கு பொது மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவித்து வருகிறார்கள். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவித்து விரைந்து தீர்வு காணும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் முதல்- அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13-ந் தேதி தொடங்கி வைத்தார்.

    குறைகளை கட்டணம் இல்லாமல் அரசிற்கு தெரிவிக்க 1100 தொலை பேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை சோழிங்கநல்லூர், ராஜீவ் காந்திகாந்தி சாலையில் ரூ.12 கோடியே 78 லட்சம் செலவில் 100 இருக்கைகளுடன் உதவி அழைப்பு மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 1100 டெலிபோன் வழியாக தெரிவிக்கலாம்.

    இணைய தளம், சமூக ஊடகங்கள், கைப்பேசி செயலி மூலமும் பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தில் பொது மக்களின் குறைகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கோரிக்கை மனு மீது ஆய்வு செய்து மனு ஏற்பு, நிராகரிப்பு, தற்போதைய நிலை குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.

    இத்திட்டம் தொடங்கி 3 நாட்களே ஆகின்றன. அதற்குள் தமிழகம் முழுவதும் இருந்து 1100 எண்ணுக்கு அழைப்புகள் குவிகின்றன. உதவி மையம் தொடங்கிய முதல் நாளில் 17 ஆயிரத்து 900 அழைப்புகளும், இரண்டாவது நாளில் 15,100 அழைப்புகளும், நேற்று 19 ஆயிரம் அழைப்புகளும் வந்துள்ளன. 3 நாட்களில் மொத்தம் 57 ஆயிரம் போன்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தன.

    பெறப்பட்ட அழைப்புகளில் பெரும்பாலான குறைகள், கோரிக்கைகள் வருவாய்த்துறையை சார்ந்ததாக உள்ளன.

    இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரின் உதவி மையத்துக்கு பொது மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவித்து வருகிறார்கள். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகின்ற அழைப்புகளில் அதிகபட்சமாக பட்டா மற்றும் பென்சன் உதவி கேட்டு வருகிறார்கள்.

    உள்ளாட்சி அமைப்புக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும் எனவும், வேலை வாய்ப்பு கேட்டும் அதிகளவு அழைப்புகள் வருகின்றன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அனுப்பப்படுகிறது.

    வருகிற காலங்களில் உதவி மையத்திற்கு இதைவிட அதிகமான அளவு போன்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×